×

மேற்கு தொடர்ச்சி மலையில் சாரல் களக்காடு கால்வாய்களில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

களக்காடு :  மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழை பெய்து வருவதால் கால்வாய்களில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து களக்காடு பகுதி விவசாயிகள் கார் சாகுபடி பணிகளை தொடங்கி உள்ளனர். நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் பொதுவாக ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால் இந்தாண்டு சற்று முன்னதாக மே மாதத்திலேயே புயல் சின்னம் காரணமாக மழை பெய்தது. அதன் பின்னர் சில நாட்களாக வெயில் கொளுத்தியது. இந்நிலையில் களக்காடு, சிதம்பரபுரம், மூங்கிலடி, பத்மநேரி, கருவேலங்குளம், மஞ்சுவிளை, மாவடி, திருக்குறுங்குடி, சாலைப்புதூர், ராஜபுதூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பருவமழை தொடங்கும் அறிகுறிகள் காணப்படுகிறது. இதன் அடையாளமாக சாரல் மழை பெய்து வருகிறது. காற்றும் வீசுகிறது.

இதுபோல களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையிலும் சாரல் மழை பொழிந்து வருகிறது. இதனால் குளிர்ந்த காற்று வீசுவதுடன் இதமான சூழல் நிலவுகிறது. மேலும் சாரல் மழையால் களக்காட்டில் ஓடும் பச்சையாறு, உப்பாறு, நாங்குநேரியான் கால்வாய், திருக்குறுங்குடி நம்பியாறுகளில் தண்ணீர் வரத் தொடங்கியுள்ளது. சிவபுரம், மலையடிபுதூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கால்வாய்களிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. சிவபுரத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்த தண்ணீர் குளங்களுக்கு திறந்து விடப்பட்டுள்ளதால் குளங்களும் நிரம்பி வருகின்றன. திருக்குறுங்குடி பெரியகுளமும் நிரம்பி வருகிறது. மலையடிவாரத்தில் உள்ள குளங்கள் நிரம்பி ததும்புகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கார் சாகுபடி பணிகளை தொடங்கி உள்ளனர். முதல் கட்டமாக நடவு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

தடையை மீறி குளியல்

களக்காடு சிவப்புரத்தில் ஓடும் கால்வாய்களில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில், தற்போது கொரோனா அச்சுறுத்தலையொட்டி பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கை பொருட்படுத்தாமல் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் தடையை மீறி குளித்து செல்வதாக உள்ளூர்வாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்.


Tags : Saral Kalakadu ,Western Ghats , களக்காடு ,மேற்கு தொடர்ச்சி மலை,சாரல் மழை
× RELATED மேற்கு தொடர்ச்சி மலையடிவார...