தரபங்கா ரயில் நிலையத்தில் ‘பார்சல்’ மூட்டையில் இருந்த மர்மபொருள் வெடித்தது: செகந்திராபாத் ஆசாமியிடம் விசாரணை

தரபங்கா: தரபங்கா ரயில் நிலைத்தில் கிடந்த பார்சல் மூட்டையில் இருந்து மர்ம பொருள் வெடித்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பீகார் மாநிலம் தரபங்கா ரயில் நிலையத்தில் மர்மமான முறையில் கிடந்த பையில் இருந்து திடீரென மர்ம பொருள் வெடித்தது. அதனால், அங்கிருந்த பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஜிஆர்பி, ஆர்பிஎப் போலீசார், மர்மபொருள் வெடித்த பையை கைப்பற்றி ஆய்வு செய்தனர். விசாரணையில், செகந்திராபாத்தில் இருந்து வந்த பார்சலில், இந்த மர்ம பொருள் வெடித்துள்ளது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸ் எஸ்.பி நவீன் குமார் கூறுகையில், ‘செகந்திராபாத்தில் இருந்து வந்த பார்சல் மூட்டையில் துணிகள் இருந்தன. அதில் இருந்த மர்ம பொருள் வெடித்து சிதறியது. இதனால், பார்சலில் இருந்த துணிகள் எரிந்தன. மற்றபடி எவ்வித பாதிப்பும் இல்லை. துணி மூட்டையின் நடுவே இருந்த வெடிபொருள் குப்பியில் ரசாயன பொருள் இருந்தது. அந்த பொருள்தான் வெடித்துள்ளது. மேலும், பார்சல் மூட்டையில் ஒரு பாட்டிலும் இருந்தது. அதில், ஒரு திரவம் நிரப்பப்பட்டு இருந்தது. இந்த சம்பவம் குறித்து தடயவியல் குழுவினர் ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர்.

தடயவியல் விசாரணைக்குப் பிறகுதான், முழு விபரங்களும் தெரியவரும். பார்சல் அனுப்பப்பட்ட நபரின் முழு முகவரி பார்சலில் எழுதப்படவில்லை. இருந்தும், செகந்திராபாத்தில் இருந்து தரபங்காவுக்கு துணி மூட்டையை பார்சல் செய்து அனுப்பியது முகமது சுஃப்யான் என்பது உறுதியாகி உள்ளது. அதனால், செகந்திராபாத் போலீசார் முகமது சுஃப்யானிடம் விசாரிக்க உள்ளனர். மர்ம பொருள் வெடிப்பு குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறோம்’ என்றார்.

Related Stories:

>