யூரோ கோப்பை கால்பந்து: அடுத்த சுற்றில் நெதர்லாந்து, பெல்ஜியம்

ஆம்ஸ்டர்டாம்: யூரோ கால்பந்து தொடரில் இன்று அதிகாலை நடந்த போட்டியில் நெதர்லாந்து 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை வீழ்த்தி, அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. மற்றொரு போட்டியில் டென்மார்க்கை வீழ்த்திய பெல்ஜியம் அணியும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. ஆம்ஸ்டர்டாமில் நடந்த இந்த போட்டியில் நெதர்லாந்து அணியின் வீரர்கள், துவக்கத்திலேயே தாக்குதல் பாணியை கடைபிடித்தனர். முன்கள ஆட்டக்காரர்கள் வெக்ஹார்ஸ்ட்டும், மெம்பிஸ் டெபேவும், அடுத்தடுத்த கோல் ஷாட்டுகளால் ஆஸ்திரியாவை மிரட்டினர். நெதர்லாந்தின் இந்த அணுகுமுறையால் ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் பெனால்டி ஷுட் கிடைத்தது.

அந்த வாய்ப்பை பயன்படுத்தி, கோல் கீப்பரை ஏமாற்றி வலது புறம் விழச் செய்து, இடது புறம் தரையோடு தரையாக பந்தை அடித்து மெம்பிஸ் டெபே கோல் அடித்தார். ஆட்டத்தின் 2ம் பாதியில் பல வாய்ப்புகளை நெதர்லாந்து வீரர்கள் நழுவ விட்டனர். இருப்பினும் 67வது நிமிடத்தில் டென்செல் டம்ஃபிரைஸ், சப்ஸ்டிடியூட் வீரர் மாலென் கடத்தி வந்து கொடுத்த பாலை வாங்கி, மிரட்டலாக ஒரு ஃபீல்டு கோல் அடித்தார். கடைசி வரை ஆஸ்திரிய வீரர்களால் கோல் ஏதும் அடிக்க முடியவில்லை. இதையடுத்து 2-0 என்ற கோல் கணக்கில் இப்போட்டியில் நெதர்லாந்து வென்றது. இந்த வெற்றியின் மூலம் நெதர்லாந்து அணி, 16 நாடுகள் மோதும் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

முன்னதாக கோபன்ஹெகன் நகரில் நடந்த போட்டியில் டென்மார்க்-பெல்ஜியம் அணிகள் மோதின. இதில் பெல்ஜியம் 2-1 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் பெல்ஜியம் அணியும் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. புகாரெஸ்டில் (ருமேனியா) நடந்த மற்றொரு போட்டியில் உக்ரைன் அணி, 2-1 என்ற கோல் கணக்கில் வடக்கு மெசடோனியாவை வீழ்த்தியது. இதன் மூலம் இத்தொடரில் முதலாவது வெற்றியை உக்ரைன் பதிவு செய்துள்ளது. இதுவரை மோதிய 2 போட்டிகளிலும் வடக்கு மெசடோனியா தோல்வியடைந்துள்ளது.

இன்று மாலை 6.30 மணி க்கு ரஷ்யாவின் செயின்ட்பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெறும் போட்டியில் குரூப் ஈ பிரிவில் இடம் பெற்றுள்ள ஸ்வீடன்-ஸ்லோவாகியா அணிகள் மோதுகின்றன. இரவு 9.30 மணிக்கு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெறும் போட்டியில் குரோஷியாவை எதிர்த்து செக்.குடியரசு மோதுகிறது. இந்திய நேரப்படி நாளை அதிகாலை 12.30 மணிக்கு லண்டனில் நடைபெற உள்ள போட்டியில் இங்கிலாந்து-ஸ்காட்லாந்து அணிகள் மோதவுள்ளன.

Related Stories:

More
>