கும்மிடிப்பூண்டி அருகே சிப்காட்டில் டயர் மறுசுழற்சி தொழிற்சாலையில் தீ விபத்து

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே தேர்வாய் கண்டிகை சிப்காட்டில் டயர் மறுசுழற்சி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே தேர்வாய் கண்டிகை சிப்காட் தொழிற்பேட்டையில் பழைய டயர்களை மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இத்தொழிற்சாலையில், நேற்று இரவு சுமார் 50 தொழிலாளர்கள் பணியாற்றி வந்த நிலையில், இன்று அதிகாலை 5 மணி அளவில் தொழிற்சாலையின் முன்பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட பழைய டயர்கள் இருந்த பகுதியில் திடீரென தீப்பற்றியது.

இதையறிந்த தேர்வாய் கண்டிகை சிப்காட் தீயணைப்பு வீரர்கள் மற்றும் கும்மிடிப்பூண்டி, சிப்காட் உள்ளிட்ட 5 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த தொழிற்சாலையை ஒட்டி சிலிண்டர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உள்ளதால், பாதிரிவேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதுகாக்கப்பட்ட இடம் என அறிவிக்கப்பட்டு பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்களை அனுமதிக்காத வகையில் தீவிரமாக தீயை அணைத்து வருகின்றனர். இதில் சுமார் 15 லட்சம் மதிப்பிலான டயர்கள் எரிந்து நாசமாகி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து, பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>