×

தென்மேற்கு பருவமழை தீவிரம் அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

* 3 நாட்களில் நீர்மட்டம் 4 அடி உயர்வு


உடுமலை : தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் 3 நாட்களில் நீர்மட்டம் 4 அடி உயர்ந்துள்ளது. உடுமலை அருகே உள்ள அமராவதி அணை 90  அடி உயரம் கொண்டது. இதன்மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. நூற்றுக்கணக்கான கிராமங்கள் குடிநீர் வசதி பெறுகின்றன. தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரை மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை, அணைக்கு முக்கிய நீராதாரமாக உள்ளது. அதன்படி, தென்மேற்கு பருவமழை கடந்த சில தினங்களுக்கு முன் துவங்கியது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலையில் பலத்த மழை பெய்து வருவதால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

அணையின் நீர்மட்டம் கடந்த 14ம் தேதி 73.12 அடியாக இருந்தது. நீர்வரத்து 200 கனஅடிக்கும் குறைவாக இருந்தது. மழை காரணமாக நீர்வரத்து 15ம் தேதி 974 கன அடியாகவும், 16ம் தேதி 981 கன அடியாகவும் உயர்ந்தது. நேற்று (17ம் தேதி) நீர்வரத்து 2102 கன அடியாக அதிகரித்தது. இதனால் நீர்மட்டம் 77.30 அடியாக உயர்ந்தது. கடந்த 3 நாட்களில் 4 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 269 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

ஏற்கனவே, கடந்த ஆண்டு பருவமழை காலத்திலும், இந்த ஆண்டு ஜனவரியிலும் பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் 100 நாட்களை கடந்து 88 அடிக்கும் மேல் இருந்தது. வழக்கமாக ஏப்ரல், மே கோடை காலங்களில் அணையின் நீர்மட்டம் 25 அடிக்கும் கீழ் சென்றுவிடும். இந்த ஆண்டு 73 அடிக்கு மேல் நீர்மட்டம் இருந்தது.இந்நிலையில், தற்போது அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், விரைவிலேயே அணை மீண்டும் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. பருவமழை முழுமையாக பெய்யும் நிலையில், இந்த ஆண்டு உபரிநீர் திறப்பு அதிகளவில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Amarawati Dam ,Southwest , Udumalai,South West Monsoon,Amravati Dam,Land Irrigation Facility
× RELATED மீன்பிடி தடைக்காலம் எதிரொலி வெளி...