×

கேரள மாநிலத்தில் ஊரடங்கு தளர்வு உடுமலை-மூணார் சாலையில் தீவிர வாகன சோதனை

உடுமலை : திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து 9/6 செக்போஸ்ட் வழியாக கேரள மாநிலம் மறையூர், காந்தலூர் மற்றும் மூணார் செல்ல முடியும். இந்த வழித்தடத்தில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இயக்கப்பட்டு வந்தன. தமிழகத்தில் இருந்து பால், முட்டை, கறிக்கோழி மற்றும் காய்கறிகள், கோழித்தீவனங்கள் கட்டுமான பொருட்கள் உள்ளிட்டவற்றை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் இடுக்கி மாவட்டத்திற்கு இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்தன. மேலும் தமிழகத்தில் இருந்து மூணார் செல்லும் சுற்றுலா பயணிகளும், அங்கிருந்து பழனி வரும் சுற்றுலா பயணிகளும் இவ்வழியே வந்து செல்வது வழக்கம். கொரோனா தொற்று பரவல் காரணமாக கேரள மாநிலத்தில் கடந்த 40 நாட்களாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கடைகள் திறக்கவும், ஆட்டோ, டாக்‌சி இயக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மதுக்கடைகள் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படவும் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உடுமலை- மூணார் சாலையில் வாகன போக்குவரத்து சற்று அதிகரித்துள்ளது. வனத்துறையினர் 9/6 செக்போஸ்டில் தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கேரளாவில் இருந்து வரும் வாகனங்களில் இபாஸ் பெற்று பயணிக்கின்றனரா?, கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனரா?, எந்த காரணத்திற்காக தமிழகம் செல்கின்றனர்? என்பது குறித்து விசாரணை மேற்கொள்கின்றனர். மேலும் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு மதுபாட்டில்கள் எதுவும் கடத்தப்படுகிறதா?,வனக்குற்றங்கள் எதேனும் அத்துமீறி நடைபெறுகிறதா? என மாவட்ட வன உதவி அலுவலர் கணேஷ்ராம் தலைமையில் சோதனைச்சாவடியில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.


Tags : Udumalai-Munar road ,Kerala , Udumalai,Kerala,Tirupur,Milk,Egg
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...