×

கோவை மாவட்டத்தில் கொரோனா நோய் இல்லாத 70 கிராமங்கள்

கோவை :தமிழகத்தில் கொரோனா நோய் பாதிப்பில் கோவை முதன்மை மாவட்டமாக இருக்கிறது நோய் தாக்கம் படிப்படியாக குறைந்த போதிலும் கோவை தொடர்ந்து முதன்மை இடத்தில் நீடிக்கிறது. கோவை மாவட்டத்தில் சில கிராமங்களில் நோய் தடுப்பு, கண்காணிப்பு பணி தீவிரமாக இருந்தது. இதனால் குறிப்பிட்ட சில வட்டாரங்களில் நோய் தாக்கம் குறைந்து விட்டது. கடந்த 14 நாள் நிலவரப்படி, கோவை மாவட்டத்தில் சுல்தான் பேட்டை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி தெற்கு, வடக்கு, ஆனைமலை வட்டாரங்களில் உள்ள 70 கிராமங்களில் நோய் பாதிக்கப்பட்டவர்கள் யாருமில்லை என உறுதி செய்யப்பட்டது.

இந்த மாதத்தின் முதல் வாரத்தில் இந்த வட்டாரங்களில் உள்ள 29 ஊராட்சிகளில் கொரோனா நோய் பாதிப்பு இல்லாமல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மாவட்ட அளவில் 228 ஊராட்சிகள் இருக்கிறது. இதில் தினசரி நோய் பாதிப்பு கடந்த மாத இறுதியில் 800 முதல் 900 ஆக இருந்தது. தற்போது 80 முதல் 100 என குறைந்து விட்டது. கடும் கட்டுபாட்டு, கண்காணிப்புகள் தொடர்ந்தால் மாவட்ட ஊராட்சிகளில் நோய் பரவல் சதவீதம் 1 சதவீதத்திற்கும் கீழ் செல்ல வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், ‘‘கிராம மக்கள் நோய் பாதுகாப்பு நடவடிக்கையில் ஆர்வம் காட்டினார்கள். பொது இடங்களில் கூட்டம் கூடவில்லை. இறப்பு ஏற்பட்ட வீடுகளில் கூட 20க்கும் குறைவான நபர்களே இருந்தனர். கடைகளை ஊர் மக்களே மூடி கட்டுப்பாடுகளை கடைபிடித்தனர். எதிர்பார்த்த அளவைவிட நோயின் தாக்கம் குறைந்துவிட்டது. ஊராட்சி பகுதியில் உள்ள மாநகர பகுதிக்கு சிலர் வேலைக்கு சென்று வந்தனர். அவர்கள் ஊரடங்கு காரணமாக நகர் எல்லைக்குள் செல்லவில்லை. இதனால் நோய் பரவல் வெகுவாக தவிர்க்கப்பட்டது. ஓரிரு வாரத்தில் மாவட்ட ஊராட்சி பகுதிகளில் தினசரி நோய் பாதிப்பு 50க்கும் கீழ் சென்றுவிடும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றனர்.

Tags : Kovai district , Coimbatore, Corona virus,70 villages
× RELATED கொரோனா தொற்று அதிகரிப்பு எதிரொலி: கோவை...