×

மாநகராட்சியாக தரம் உயருமா சிவகாசி? வணிகர்கள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு

சிவகாசி : சிவகாசி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வணிகர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகாசி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தும் நோக்கில் சிவகாசி, திருத்தங்கல் நகராட்சி மற்றும் சிவகாசி ஒன்றிய பகுதியில் உள்ள தேவர்குளம், சாமிநத்தம், செங்கமலநாச்சியார்புரம், ஆணையூர், சித்துராஜபுரம், விஸ்வந்ததம், அனுப்பன்குளம், பள்ளபட்டி, நாரணாபுரம் கிராம ஊராட்சியை சிவகாசி மாநகராட்சியுடன் இணைக்க கடந்த அதிமுக ஆட்சியல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முதல்கட்டமாக திருத்தங்கல் நகராட்சியை சிவகாசி நகராட்சியுடன் இணைக்கும் பணிக்கு நகராட்சி நிர்வாக ஆணையர் அனுமதி வழங்கினார். சிவகாசி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளையும், திருத்தங்கல் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளையும் இணைக்க நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர், கடந்த மார்ச் மாதம் பரிந்துரை செய்தார். திருத்தங்கல் நகராட்சி 13 ச.கி.மீட்டர் பரப்பளவு கொண்டது. தற்போது 60 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். மொத்த ஆண்டு வருவாய் ரூ.12 கோடியாகும்.

சிவகாசி 6.89 ச.கி.மீட்டர் பரப்பளவு கொண்டது. மொத்த ஆண்டு வருவாய் ரூ.28 கோடி. இந்த இரண்டு நகராட்சிகளையும் இணைப்பதன் மூலம் ஆண்டுக்கு ரூ.40 கோடி வருவாய் கிடைக்கும். சிவகாசி நகராட்சியுடன், திருத்தங்கல் நகராட்சியை இணைக்க ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநருக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. திருத்தங்கல் நகராட்சியை சிவகாசி நகராட்சியுடன் இணைக்க வார்டு எல்லைகள் வரையறுக்கும் பணிகளும் தொடங்கப்பட்டன.

இதுகுறித்த அரசின் உத்தரவு மாவட்ட கலெக்டர், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர், சிவகாசி நகராட்சி ஆணையாளர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டது. சிவகாசி நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டால் தொழில் விரிவாக்கம், விசாலமாக சாலை, குடிநீர், வாறுகால் போன்ற திட்டங்கள் நிறைவேற்றப்படும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.சிவகாசியில் பட்டாசு, தீப்பெட்டி மற்றும் அச்சு தொழில் பிரதானமாக நடைபெற்று வருகிறது. மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டால் ‘குட்டி ஜப்பான்’ என பெயர் பெற்ற சிவகாசி நகரம் தொழில் துறையில் மேலும் வளர்ச்சி பெறும். எனவே, சிவகாசியை மநகராட்சியாக தரம் உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Sivakasi , Sivakasi, Corporation, People
× RELATED சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து..!!