×

கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டு கிடக்கும் புதர் மண்டிய அரசு பள்ளிகள் `பளிச்சென’ மாற்றம் காணுமா?

*உள்ளாட்சி அமைப்புகள் பராமரிக்க கோரிக்கை


விருதுநகர் : கொரோனா தொற்று பரவலால் மூடப்பட்ட பள்ளிகளில் பராமரிப்பு இல்லாததால் புதர் மண்டி பாம்புகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இப்பள்ளிகளை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பராமரிப்பு செய்ய மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 2020 முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் மூடிக்கிடக்கின்றன. இதனால் இப்பள்ளிகளில் மாணவர்கள் நடமாட்டம் இல்லை. ஆசிரியர்களும் பள்ளிகளுக்கு வந்து செல்லாததால் அனைத்து பள்ளி வளாகங்களும் பராமரிப்பின்றி புதர் மண்டி கிடக்கின்றன.

விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, திருவில்லிபுத்தூர் ஆகிய 4 கல்வி மாவட்டங்களில் 1,264 துவக்கப் பள்ளிகள், 150 நடுநிலைப்பள்ளிகள், 110 உயர்நிலை, 216 மேல்நிலைப் பள்ளிகள் என 1,740 பள்ளிகள் உள்ளன. இவற்றில் சுமார் 3லட்சம் மாணவ, மாணவியர் வரை கல்வி கற்று வருகின்றனர்.
மெட்ரிக் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்திலும் கொரோனா காலத்திலும் பராமரிப்பு பணிகள் நடந்துள்ள நிலையில், அரசு பள்ளிகள் எதிலும் பராமரிப்பு பணிகள் நடக்கவில்லை. பூட்டிய பள்ளிகள் அனைத்தும் கடந்த 15ம் தேதி திறக்கப்பட்டன. அரசுப்பள்ளிகளில் வாட்ச்மேன் மற்றும் தூய்மை பணியாளார்கள் பணி நியமனங்கள் இல்லாத நிலையில் அனைத்து பள்ளிகளின் உட்புறம், வெளிப்புறங்கள் தூசி படிந்து புதர் மண்டி கிடக்கின்றன.

விருதுநகரில் நடுமையத்தில் உள்ள சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலகம் உள்ளநிலையில் அலுவலர்கள் வந்து சென்றாலும், பள்ளிகளில் மாணவ, மாணவியர் வருகை இல்லாததால் அனைத்து பகுதிகளிலும் புதர்மண்டி கிடக்கின்றன. அவற்றில் பாம்புகள் நடமாட்டம் அதிகம் இருக்கின்றன.

கொரோனா இரண்டாம் அலை பரவல் வேகம் குறைந்துள்ள நிலையில், பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பும் வேலைகள் வேகம் பெற்றுள்ளது.பள்ளிகள் திறந்தால் அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவியர் பள்ளிகளுக்கு செல்லும் முன்பாக பள்ளிகளின் உள் மற்றும் வெளிப்பகுதிகளை தூய்மைப்படுத்தி பாம்புகள், விஷ ஜந்துகளை அகற்றிட பள்ளிகளை திறக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு ஆசிரியர்கள் தொழில் வரி செலுத்தும் நிலையில், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அரசு பள்ளிகளின் உள் மற்றும் வெளிப்பகுதிகளில் தூய்மை பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.



Tags : Corona , Virdhunagar, School Reopen,No Work
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...