×

உலகின் விலை உயர்ந்த மாந்தோட்டத்தை உருவாக்கிய ம.பி. தம்பதி!: ஒரு கிலோ மாம்பழம் ரூ. 2.7 லட்சம்..!!

போபால்: மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரில்  உலகின் விலை உயர்ந்த மாந்தோட்டத்தை உருவாக்கியுள்ள தம்பதியினர் மாம்பழங்கள் திருடுபோவதை தடுக்க காவலாளிகள், வேட்டை நாய்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர். கோடை காலம் என்றாலே மாம்பழ சீசன் தொடங்கிவிடும். 


தெற்கு ஆசியாவில் விளைவிக்கப்படும் மாம்பழங்குக்கு உலக அளவில் மவுசு அதிகம் என்றாலும் சாகுபடியும் அதிகளவில் நடைபெறுவதால் இன்று ஒரு கிலோ மாம்பழம் அதிகபட்சமாக 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் ஜப்பானில் விளைவிக்கப்படும் உலகின் அரியவகை மாம்பழமான மியாஷகி மாம்பழம் சர்வதேச சந்தையில் ஒரு கிலோ 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 


மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரில்  மியாஷகி மாம்பழங்களை சாகுபடி செய்து வரும் சங்கள் பரிகார் மற்றும் ராணி தம்பதியினர் 52 மரங்களை பாதுகாக்க 6 காவலாளிகள் 4 வேட்டைநாய்களை பணியில் அமர்த்தியுள்ளனர். ரயில் பயணத்தின் போது கிடைத்த 2 மியாஷகி மா செடிகளை கொண்டு ஒரு தோட்டத்தை உருவாக்கியுள்ள சங்கள் பரிகார், மாமரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். 


அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த எட்வின் என்பவர் கடந்த 1939ல் மியாஷகி மாம்பழ ரகத்தை உருவாக்கினார். 1985ல் ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்ட மியாஷகி ரகத்தை ஜப்பானியர்கள் சூரியனின் முட்டை என்று அழைக்கின்றனர். மியாஷகி நகரில் அதிகம் விளைவிக்கப்படுவதால் பிற நாடுகளில் இந்த ரக மாம்பழங்கள் மியாஷகி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. 


பெரும்பாலும் வெட்டவெளியில் வளர்க்கப்படும் மாமரங்கள் ஜப்பானில் குடில் அமைத்து வளர்க்கப்படுகின்றன. குறைந்த  பூக்கள் பூத்ததும் தேனீக்களை கொண்டு மகரந்த சேர்க்கை நடைபெறுகிறது. சிறிய அளவிலான பிஞ்சுகளை நீக்கிவிட்டு பெரிய அளவில் இருப்பவை மற்றும் பூச்சுகள் அண்டாமல் பாதுகாக்கின்றனர். 


சராசரியாக 350 கிராம் எடை கொண்ட மியாஷகி மாம்பழத்தில் 15 சதவீதம் சர்க்கரை உள்ளதால் மற்ற ரகங்களை விட இனிப்பு தன்மை அதிகம். ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை விளைவிக்கப்படும் இந்த அரியவகை மாம்பழங்களை பரிசுப்பொருட்களாக பரிமாறிக்கொள்ளும் வழக்கமும் ஜப்பானியர்களிடம் உள்ளது. 


ஜப்பான் தவிர தாய்வான், பிலிப்பைன்ஸ், அமெரிக்கா நாடுகளில் விளையும் மியாஷகி மாம்பழம் தற்போது இந்தியாவில் மத்தியப்பிரதேசத்தில் விளைவிக்கப்படுகிறது. 



Tags : Expensive Garden, M.P. Couple, a kilo of mango is Rs 2.7 lakh
× RELATED மன்மத ராசா.. மன்மத ராசா.. கன்னி மனச...