கலைஞர் நூலகம் திட்ட அறிக்கையை விரைந்து தயாரிக்க அறிவுரை 11 மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகளை இந்தாண்டு இறுதிக்குள் முடிக்க வேண்டும்: அமைச்சர் எ.வ.வேலு பொறியாளர்களுக்கு உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் நடந்து வரும் 11 மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகளை இந்தாண்டு இறுதிக்குள் முடிக்க வேண்டும் என்று ஆய்வுக்கூட்டத்தின் போது, அமைச்சர் எ.வ.வேலு பொறியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். பொதுப்பணித்துறை மூலம் நடந்து வரும் கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் சென்னையில் ஆய்வு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் மருத்துவமனைகளுக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கும் பணிகள், மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கான கட்டிடங்கள் ஆகியவை குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.  

11 இடங்களில் கட்டப்பட்டுவரும் புதிய அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைகள் ஆகியவற்றின் கட்டிடப்பணிகளின் முன்னேற்றம் குறித்து அமைச்சர் ஆய்வு செய்தார். மேலும், விரைவாக கட்டுமானப் பணிகளை முடித்து நடப்பாண்டில் மாணவர்களை சேர்ப்பதற்கு வசதியாக விரைவில் இவ்வாண்டு இறுதிக்குள் கட்டி முடிக்கப்பட வேண்டும். தொடர்ந்து, புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 6 மாவட்டங்களுக்கான மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடங்கள் கட்டும் பணிகளையும், பல்வேறு அரசு துறைகளுக்கு கட்டப்பட்டு வரும் கட்டிடப்பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட சென்னையில் ரூ.250 கோடியில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, சங்கத்தமிழ் வளர்த்த மதுரையில் ரூ.70 கோடியில் கலைஞர் நினைவு நூலகம், கி.ராஜநாராயணனுக்கு கோவில்பட்டியில் கட்டப்படவுள்ள நூலகத்துடன் கூடிய மணிமண்டபம் ஆகியவை குறித்து ஆய்வு செய்தார். இத்திட்டங்களுக்கான மதிப்பீடுகள் வரைபடம் ஆகியவற்றை விரைவாக இறுதி செய்து சமர்ப்பிக்குமாறு அமைச்சர் உத்தரவிட்டார். அனைத்து கட்டுமானப்பணிகளும் நல்ல தரத்துடன், உறுதியுடனும் கட்டப்பட வேண்டும் என்றும், கட்டிடத்தின் தரத்திற்கு எந்தவிதமான குந்தகம் இல்லாமல் கட்டிடம் கட்டப்பட வேண்டும், கட்டிடம் நல்ல தரத்துடனும், உறுதியுடனும் கட்டப்படவேண்டும் என்று அமைச்சர் எ.வ.வேலு பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

Related Stories:

>