×

ஆன்லைன் விளையாட்டில் ஆபாசமாக பேசிய விவகாரம் யூடியூபர் மதனின் பாஸ்போர்ட் வங்கி கணக்கை முடக்க முடிவு: போலீசார் நடவடிக்கை

சென்னை: ஆன்லைன் விளையாட்டில் ஆபாசமாக பேசிய விவகாரத்தில் தலைமறைவாக உள்ள யூடியூபர் மதனின் வங்கி கணக்கு மற்றும் பாஸ்போர்ட்டை முடக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். பப்ஜி விளையாட்டில் ஆபாசமாக பேசி ஒளிப்பரப்பி வந்த மதன் மீது, மத்திய குற்றப்பிரிவு போலீசில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். அதன்பேரில், பெண்கள் குறித்து ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தகவல் காட்டு தீயாக பரவியதால் தமிழகம் முழுவதும் இருந்து ஆன்லைன் மூலமாக 160க்கும் மேற்பட்ட புகார்கள் யூடியூபர் மதன் மீது கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், தனிப்படை போலீசார் தன்னை தேடி வருவதை அறிந்த மதன், ‘விபிஎன் சர்வரை’ பயன்படுத்தி  தன் இருப்பிடத்தை யாரும் கண்டுபிடிக்க முடியாதபடி தப்பித்து வருகிறார். எனினும்  மதனால் தொடங்கப்பட்ட 3 யூடியூப் சேனலுக்கும் அவரது மனைவி கிருத்திகா அட்மினாக இருந்து வருவது தெரியவந்தது. இதனால் போலீசார் அவரை குழந்தையுடன் கைது செய்தனர்.மேலும், அவரது சொந்த ஊரான சேலம், தற்போது வசித்து வந்த பெருங்களத்தூர் போன்ற பகுதிகளில் உள்ள அவரது வீட்டை  போலீசார் சோதனை செய்து, அவரது தந்தை மாணிக்கத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், யூடியூப் சேனல் மூலம் கிடைத்த வருவாயில் 3 சொகுசு கார்கள், 2 சொகுசு பங்களாக்கள் ஆகியவை வாங்கியதும் தெரிந்தது. இதையடுத்து, பப்ஜி விளையாட்டை பதிவிறக்கம் செய்ய பயன்படுத்திய லேப்டாப், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பப்ஜி விளையாட்டு மூலம் கிடைத்த வெளிநாட்டு பணத்தை பிட்காயினாக மாற்றி முதலீடு செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்ததையடுத்து மதனின் வங்கி கணக்குகளை முடக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதேபோல், அவர் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க அவரது பாஸ்போர்ட்டை முடக்கவும் முடிவு செய்துள்ளனர்.

மதனின் மனைவியிடம் நடத்திய விசாரணையில், மதனின் நெருக்கமானவர்கள் யார், நண்பர்கள் யார் என்ற பட்டியலை சேகரித்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். மதனின் நெருங்கிய நண்பரான யூடியூபர் ஒருவர் பெங்களூருவில் இருப்பது தெரியவந்து. இதனால் மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் ஒரு குழு பெங்களூருவில் முகாமிட்டுள்ளனர். மதன் தனது அடையாளங்களை மறைத்து தப்பித்து வந்த நிலையில், தற்போது புகைப்படங்கள் வெளிவந்துள்ளதால் இனி தப்பிக்க முடியாது, என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனைவி கிருத்திகா கைது செய்யப்பட்டுள்ளதால் மதன் வேறு வழியின்றி போலீசாரிடம் சரணடைய இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பல வியூகங்களை வகுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் மதனை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மதனை போல் சமூக வலைதளங்களில் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டு வரும் நபர்களையும் கண்காணித்து வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* விரைவில் கைது
சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று நிருபர்கள் சந்திப்பில் கூறுகையில், ‘‘யூடியூபர் மதன் மனைவியை கைது செய்துள்ளோம். அவரது கணினி உட்பட அவருடைய வீட்டை சோதனை செய்து வருகிறோம். தலைமறைவாக உள்ள மதனை தேடி வருகிறோம். விரைவில் அவர் கைது செய்யப்படுவார்,’ என்றார்.

* ஓட்டல் நடத்தி கைவரிசை
யூடியூபர் மதன் கடந்த 2017ம் ஆண்டு அம்பத்தூர் கள்ளிக்குப்பத்தில் அசைவ உணவகம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இதற்காக, வங்கி மற்றும் நண்பர்களிடம் ரூ.10 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளார். ஆனால், தொடர்ந்து உணவகத்தை நடத்த முடியாமல் தலைமறைவாகியுள்ளார். கடைக்கு வாடகையாக ரூ.2 லட்சம் வரை கொடுக்காமல் ஏமாற்றியதால் அந்த கட்டிடத்தின் உரிமையாளர் கஜபதி இதுபற்றி அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்பதும் தற்போது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாகவும் விசாரித்து வருகின்றனர்.

* நண்பர்களுக்கு சிக்கல்
யூடியூபில் தன்னை பின் தொடர்பவர்கள் மூலம் மாதம் ரூ.7 லட்சம் வரை மதன் வருமானம் பெற்ற நிலையில், அவரது நண்பர்கள் 20க்கும் மேற்பட்டோர், மதனின் வீடியோக்களை தங்களது யூடியூப் சேனலில் பதிவேற்றி, சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, அதன் மூலம் வருவாய் ஈட்டியது தெரியவந்துள்ளது. இதனால், அவர்களையும் பிடித்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். மதன் தன்னை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்தியாவில் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டு செயலியை மட்டுமல்லாமல் கொரியாவில் உள்ள தடை செய்யப்பட்ட விளையாட்டு செயலியையும் விபிஎன் சர்வர் மூலம் பதிவிறக்கம் செய்து விளையாடி வந்துள்ளார். மேலும், தனது வீடியோக்களை யூடியூபில் பதிவேற்றுவதற்காகவே 3 தொலைதொடர்பு சேவை நிறுவனங்களின் எண்களை மதன் பயன்படுத்தி வந்துள்ளார்.

Tags : Utopian Madan , Utopian Madan's Passport Bank Account Deleted: Police Action
× RELATED பார்க்கிங் பகுதிகளுக்கு புதிய...