முதல்வரின் சந்திரசேகர ராவின் கனவு திட்டம் தெலங்கானாவிலும் ஒரு திருப்பதி: ரூ.1200 கோடியில் செலவில் பிரமாண்டம்

தெலங்கானா: ஆந்திராவின் திருமலை கோயிலுக்கு நிகராக தெலங்கானாவிலும் ரூ.1,200 கோடி செலவில் பிரமாண்ட கோயில் அமைக்கப்பட்டு வருகிறது. ஆந்திர மாநிலத்தில் உலக பிரசித்த பெற்ற திருலை எனப்படும் திருப்பதி கோயில் அமைந்துள்ளது.  தினமும் லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். கொரோனா அச்சுறுத்ததலால் இப்போது பக்தர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டபோது இந்த கோயில் ஆந்திராவுக்கு சென்று விட்டது. இந்நிலையில், புதிய மாநிலமாக உருவான தெலங்கானாவிலும் இதே போன்ற கோயிலை கட்டமைக்க வேண்டும் என முதல்வர் சந்திர சேகர ராவ் முடிவு செய்தார். இது அவரின் கனவு  திட்டமாகும். இதற்காக யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள லட்சுமி நரசிம்மர் குடவரை கோயிலை புனரமைக்க அரசு முடிவு செய்தது.

இது, ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படுகிறது. கோயிலை புனரமைப்பதற்காக முதலில் ரூ.1,800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர், இது ரூ.1,200 கோடியாக குறைக்கப்பட்டது. இந்த கோயில் ஐதராபாத்தில் இருந்து 70 கிமீ தொலைவில்  மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. இதனை சுற்றி 8 மலைகள் அமைந்துள்ளன. ஒரு மலை என்பது கோயிலாகும். இரண்டு மலைகள் மேம்பாட்டு பணிகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.  மலைகளில் ஒன்று கோயில் நகரமாக இருக்கும். இங்கு மருத்துவமனைகள், வணிக திட்டங்கள் மற்றும் மால்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. திருப்பதி கோயில், புதிதாக கட்டப்பட்டு வரும் அயோத்தி ராமர் கோயிலை விட பிரமாண்டமாக இக்கோயிலை அமைக்க சந்திர சேகர ராவ் திட்டமிட்டு இருக்கிறார்.

கடந்த 2016ம் ஆண்டு கோயிலை புனரமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்துக்காக 1,900 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. கோயில் பணிகளை கடந்த 2019ம் ஆண்டுக்குள் முடிப்பதற்கு திட்டமிடப்பட்டது. கொரோனா முதல் அலையின்போது 60 சதவீத தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். எனினும், அதிகாரிகள் தொடர்ந்து பணிகளை நடத்தி வருகின்றனர். முதல்வர் ராவ் தனிப்பட்ட அக்கறை எடுத்துக் கொண்டதால் பணிகள் திட்டமிட்டபடி முடிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். கடந்த 10 மாதங்களில் முதல்வர் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்துக்கு இரண்டு முறை வந்து பார்வைிட்டதாகவும் பல மணி நேரம் தங்கியிருந்து பணிகளை மேற்பார்வை செய்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   கோயில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டால் ஒரு நாளைக்கு 5 ஆயிரம் பக்தர்கள் என்ற எண்ணிக்கையானது ஒரு நாளைக்கு 30 ஆயிரமாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  

சிறப்பு அம்சங்கள்

* கோயில் கட்டுமானத்தில் சிமென்ட், செங்கல் பயன்படுத்தப்படவில்லை.

* கிருஷ்ணாசிலா கல் அல்லது கருப்பு கிரானைட் கல்லை பயன்படுத்தி கோயில் கட்டப்படுகிறது.  

* ஆந்திராவின் பிரகாசம் மாவட்டம், குர்ஜெபள்ளி சுரங்கத்தில் இருந்து கிரானைட் கற்கள் எடுத்து வரப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.

* நிஜாம் காலத்தில் பயன்படுத்தப்பட்ட கட்டிட பூச்சு முறை பயன்படுத்தப்படுகிறது.

* இதில் முட்டை ஓடுகள் பயன்படுத்தப்படவில்லை.

* மற்ற பொருட்களான சுண்ணாம்பு, சணல், வெல்லம், கற்றாழை உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டு உள்ளது.  

* கோயிலில் 100க்கும் மேற்பட்ட யாளி தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்து மத புராணங்களின்படி யாளி என்பது ஒரு தொன்ம உயிரின சிற்பமாகும்.

* 500 தமிழக சிற்பிகள்

இந்த கோயில் கட்டுமான பணியில் மொத்தம் 1,500 பேர் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 500 பேர் அண்டை மாநிலமான ஆந்திரா, தமிழகத்தை சேர்ந்த சிற்பிகள் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர்.

* 80% பணிகள் முடிந்தது

பிரதான கோயில் அமைப்பதற்கு ரூ.243 கோடியும், அருகில் குடியிருப்புகள் கட்டுவதற்கும் என இதுவரை கோயில் நகர திட்டத்துக்கு ரூ.842 கோடி செலவிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 80 சதவீத பணிகள் முடிந்து விட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Related Stories: