×

பப்ஜி விளையாட்டில் கோடி கணக்கில் சுருட்டல்: ஆபாசமாக பேசி சிறுமிகள், இளம்பெண்களை வலையில் வீழ்த்திய யூ டியூப்பர் மதன் எங்கே?: பொறிவைத்து தேடும் தனிப்படை

பெரம்பூர்: பப்ஜி விளையாட்டின் மூலம் சிறுமிகள் முதல் இளம்பெண்கள் வரை ஆபாசமாக பேசி கோடி கணக்கில் பண மோசடி செய்த மதனை பிடிக்க தனிப்படையினர் தீவிர காட்டி வருகின்றனர். இதுசம்பந்தமாக கைது செய்யப்பட்டுள்ள அவரது மனைவி மற்றும் கைக்குழந்தையை சிறையில் அடைத்துள்ளனர்.
இந்தியாவில் பப்ஜி விளையாட்டில் மூழ்கிய பலர் உயிரிழந்தனர். அந்த விளையாட்டில் இருந்து வெளியே வரமுடியாமல் சிறுவர்கள், இளைஞர்கள் என பல தரப்பினரும் சிக்கித் தவித்தனர். இதனால் இந்த விளையாட்டை தடைசெய்யவேண்டும் என்று பல தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதையடுத்து இந்தியாவில் பப்ஜி விளையாட்டுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஆனால் சென்னையை சேர்ந்த மதன், பப்ஜி விளையாட்டில் சிறுமிகள் முதல் இளம்பெண்கள் வரை ஆபாசமாக பேசி பணத்தை மோசடி செய்து வந்தார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின்படியும் சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தலின்படியும் யூ டியூப்பர் மதன் மீது  நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சென்னை புளியந்தோப்பு சைபர் கிரைம் பிரிவு போலீசில் எம்கேபி நகரை சேர்ந்த ஜோ மைக்கல் பிரவீன்  என்பவர் உள்பட பலர் புகார் கொடுத்தனர். இதன் அடிப்படையில், விசாரணை நடத்திய போலீசார், விசாரணைக்கு ஆஜராகும்படி மதனுக்கு  சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் நேரில் ஆஜராகாமல் எஸ்கேப் ஆகிவிட்டார்.

 இதனிடையே பப்ஜி மதன் மீது வடபழனியை சேர்ந்த அபிஷேக் ரபி என்பவர் புகார் கொடுத்தார். இதையடுத்து புளியந்தோப்பு சைபர் கிரைம் பிரிவு மற்றும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆகியோர் இணைந்து மதனை தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைமில் கொடுக்கப்பட்டுள்ள ஒரு புகாரில், 4 பிரிவுகளில் கீழ் மதன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பப்ஜி மதன் மீது தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் இருந்து பாதிக்கப்பட்டவர்கள் ஆன்லைன் மூலம் காவல்துறைக்கு தொடர்ந்து புகார்களை அனுப்பி வருகின்றனர். இவ்வாறாக இதுவரை 159 புகார்கள் ஆன்லைனில் வந்துள்ளது. இந்த புகார்களை அந்தந்த மாவட்டத்தில் இருக்கும் சைபர் பிரிவு போலீசார் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து மதனை தேடிவந்த நிலையில், அவர் சொந்த ஊரான சேலத்தில் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனால் அவரை கைது செய்ய தனிப்படையினர் சேலத்துக்கு விரைந்துள்ளனர். இதனிடையே சென்னை பெருங்களத்தூரில் உள்ள வீட்டில் மதனின் தந்தை மாணிக்கம் (78) மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள மதனின் மனைவி கிருத்திகா மற்றும் 8 மாத கைக்குழந்தையை சென்னைக்கு அழைத்துவந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து  விசாரணை நடத்தினர். இதில், மதன், கிருத்திகா ஆகியோர் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும் பாலிடெக்னிக் படிக்கும்போது இருவரும் காதலித்துள்ளனர். இவர்களின் திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மதன், கிருத்திகா ஆகியோர் தனி வீட்டில் குடும்பம் நடத்தியுள்ளனர். கடந்தாண்டு திருமணம் செய்த இவர்களுக்கு 8 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது.

 இதையடுத்து கிருத்திகாவை கைது செய்து நேற்று மாலை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை வருகின்ற 30ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து கிருத்திகாவை அவரது 8 மாத குழந்தையுடன் சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருக்கும் மதனை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவரது தந்தை மற்றும் அண்ணன் சிபிசிஐடியின் விசாரணையில் உள்ளனர்.  மேலும் மதனின்  ஐபி முகவரி மூலமாக அவரை நெருங்கும் முயற்சியிலும்   யூ டியூப்பில் இணைக்கப்பட்டுள்ள வங்கி தகவல்களை பெற்று அதில் உள்ள பண பரிமாற்றங்களை கொண்டும் மதனை நெருங்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மதனுடன் யூ டியூப்பில் நெருக்கமாக உள்ளவர்களின் ஐபி முகவரியை கொண்டு அவர்களை நெருங்கும் பணியிலும் சைபர் கிரைம் போலீசார் கவனம் செலுத்தி வருகின்றனர்.  இதுபற்றி போலீசார் கூறுகையில், ‘’மதனை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர் கைது செய்யப்பட்டபிறகுதான் மேலும் பல தகவல்கள் கிடைக்கும்’ என்றனர்.

மனைவி, கைக்குழந்தைக்கு சிறை
சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதனின் மனைவி கிருத்திகாத்தான், மதன் நடத்திவந்த யூ டியூப் சேனலில் அட்மினாக செயல்பட்டுவந்துள்ளார். நிர்வாக அதிகாரியாகவும் அவர் இருந்துள்ளார். இதனால்தான் அவரது மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக கிருத்திகாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவருடன் அவரது கைக்குழந்தையும் அடைக்கப்பட்டுள்ளது. முன்னதாக போலீசார் விசாரணைக்கு கிருத்திகா ஒத்துழைப்பு கொடுக்க மறுப்பதாக தெரிகிறது. இதையடுத்து அவரை வருகின்ற 30ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஆடி காரில் ஆட்டம்
யூ டியூப்பர் மதன், கடந்த 2017ம் ஆண்டு ஹோட்டல் நடத்தியுள்ளார். இதில் நஷ்டம் ஏற்பட்டதால் மனைவி கிருத்திகாவுடன் இணைந்து 3 யூடியூப்  சேனல்களை துவங்கியுள்ளார். இதில் முதலில் பப்ஜி விளையாட்டை தனது சேனலில் வெளியிட்டுள்ளார். இதில் போதுமான பார்வையாளர்கள் கிடைக்காததால் உடனடியாக பணம் சம்பாதிக்கவேண்டும் என்று ஆசையில், பெண்கள் குறித்து ஆபாசமாக பேசி வீடியோவை வெளியிட்டு உள்ளார். இதற்கு சிறுவர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்ததும் இந்த தொழிலையே தொடர முடிவு செய்துள்ளார். சுமார் 8 லட்சத்துக்கு மேல் பார்வையாளர்கள் அவரது யூ டியூப் சேனலை பார்க்க ஆரம்பித்ததும் மாதத்துக்கு 10 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்துள்ளார். இதன் மூலம் கோடி கணக்கில் பணம் சுருட்டியுள்ளார்.

 இந்த நிலையில்தான் பப்ஜி விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் வருமானம் அடியோடு முடங்கியதால் கிரிமினல் வேலையில் மதன் இறங்கினார். இதற்காக வி.பி.என் சர்வரை பயன்படுத்தி தொடர்ந்து பப்ஜி விளையாட்டில் தொடர்ந்து  சிறுவர்கள், இளைஞர்களை தனதுவசம் இழுத்து அடிமையாக்கியுள்ளார். இதன்பிறகு அவருக்கு வருமானம் மீண்டும்வர துவங்கியதால் ஆரம்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தினார். இந்த பணத்தில் சென்னை அருகே பெருங்களத்தூர் வேங்கைவாசலில் 2 சொகுசு  பங்களா வாங்கியுள்ளார். ஆடி கார் உள்பட 2 சொகுசு கார்களை வாங்கி வலம்வந்துள்ளார். இதையடுத்து பெருங்களத்தூர் வீட்டில் போலீசார் சோதனை நடத்தி, லேப்டாப், விலையுயர்ந்த செல்போன்களை கைப்பற்றியுள்ளனர். அவரது வீட்டில் இருந்து 2 சொகுசு கார்களையும் கைப்பற்றினர்.

Tags : Bupji ,Crowdy ,U Tuber mathan , YouTuber madhan
× RELATED கோடி கணக்கில் சொத்து குவிப்பு!: பப்ஜி...