×

நெல்லை அருகே ஐடிஐ மாணவருக்கு வெட்டு வீடுகள், வாகனங்கள் சூறை: 2வது நாளாக பதற்றம்; ஆயிரம் போலீசார் குவிப்பு ; 50 பேர் மீது வழக்கு

நெல்லை: நெல்லை அருகே உள்ள கீழமுன்னீர்பள்ளம் மருதம்நகரை சேர்ந்தவர் பாலமுருகேஷ் (19). பேட்டை ஐடிஐயில் படித்து வரும் இவர், நேற்று மாலை தனது நண்பர்கள் 5 பேருடன் அங்குள்ள பாளையங்கால்வாயில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது 3 பைக்குகளில் வந்த 6 பேர், பாலமுருகேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றனர். காயமடைந்த அவர், நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதற்கிடையில் இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட பாலமுருகேஷ் தரப்பினர் திரண்டு சென்று கீழமுன்னீர்பள்ளத்தில் உள்ள எதிர்தரப்பினரின் 10க்கும் மேற்பட்ட வீடுகள், 5 பைக்குகள், ஒரு ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகனங்களையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். வைக்கோல் படப்புக்கும் தீ வைக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட தரப்பினர் நெல்லை - அம்பை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதேபோல் வெட்டுபட்ட பாலமுருகேஷ் தரப்பினரும் மருதம்நகரில் திரண்டு பாலமுருகேஷை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது.

சம்பவ இடத்துக்கு டிஐஜி பிரவீன்குமார் அபிநபு, எஸ்பி மணிவண்ணன், டிஎஸ்பி உதயசூரியன் மற்றும் போலீசார் சென்று மறியலில் ஈடுபட்ட இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இதுதொடர்பாக முன்னீர்பள்ளம் போலீசார் விசாரணை நடத்தி பாலமுருகேஷை வெட்டியதாக முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த சங்கரலிங்கம் (26), அவரது தம்பி அருண்பாண்டி (20) உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர். இதேபோல் வீட்டை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியதாக 40 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு 2வது நாளாக பதற்றம் நீடிப்பதால் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக நெல்லை மாவட்ட எஸ்பி மணிவண்ணன் கூறுகையில், ‘கடந்த 2019ம்  ஆண்டு ராஜாமணி என்ற ஐடிஐ மாணவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம்  தொடர்பாக இருதரப்பினர் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. குற்றவாளிகள்  மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

சமாதான பேச்சுவார்த்தை
இந்த சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் விஷ்ணு உத்தரவின்பேரில் முன்னீர்பள்ளத்தில் இன்று நெல்லை ஆர்டிஓ சிவகிருஷ்ணமூர்த்தி தலைமையில் இருதரப்பினரையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடந்தது.

Tags : ITI ,Paddy , nellai
× RELATED வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ₹1.83 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது