×

சீனா தன்னிச்சையாக உருவாக்கி வரும் விண்வெளி நிலையத்திற்கு 3 வீரர்கள் புறப்பட்டனர்!: விண்வெளி ஆய்வில் புதிய மைல்கல் என பெருமிதம்..!!

பெய்ஜிங்: சீனா சொந்தமாக அமைத்து வரும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 3 வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மண்ணில் ஆதிக்கம் செலுத்துவது யார் என்பதை தாண்டி விண்ணில் ஆதிக்கம் செலுத்த வல்லரசுகள் தொடர்ந்து முயற்சி எடுத்துக்கொண்டே தான் இருக்கின்றன. இதன் ஒருபகுதியாக அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் பங்களிப்பில் விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையம் இயங்கி வருகிறது.  


சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சீன விண்வெளி வீரர்கள் செல்ல அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதனை அடுத்து சீனா தற்போது தனியாக விண்வெளி நிலையத்தை அமைத்து வருகிறது. தியாஹே என பெயரிடப்பட்டுள்ள இந்த விண்வெளி நிலையத்திற்கான மைய பகுதியை கடந்த ஏப்ரல் 29ம் தேதியன்று சீனா விண்ணில் செலுத்தி இருந்தது. 


இதன் தொடர்ச்சியாக ஒரு மாதம் கழித்து அதாவது மே 29ம் தேதியன்று விண்வெளி நிலையத்திற்கான எரிபொருள், விண்வெளி உடைகள், உணவு பொருட்களுடன் தியான்ஜோ -2 என்ற சரக்கு விண்கலத்தை சீனா விண்ணுக்கு அனுப்பியது. இந்த நிலையில், விண்வெளி நிலையத்தில் பணியாற்றுவதற்காக 3 விண்வெளி வீரர்களை அனுப்பி வைக்க போவதாக சீனா ஏற்கனவே அறிவித்திருந்தது. 


இதற்காக கடந்த சில மாதங்களாகவே விண்வெளி வீரர்களுக்கு என தனியாக பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பயிற்சிகள் நிறைவடைந்த நிலையில் அவர்கள் மூவரும் ஷென்ஜோ -12 என்ற விண்கலம் மூலம் விண்வெளிக்கு அனுப்பி வைக்கும் பணி இன்று நடைபெற்றது. முன்னதாக விண்வெளி வீரர்கள் அனைவரும் பொதுமக்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்டனர். கூடி இருந்த பொதுமக்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். 


அங்கு குழுமியிருந்த சிறுவர்கள் விண்வெளி வீரர்களிடம் கற்றுக்கொள்கிறோம் என சீன மொழியில் முழங்கினர். இதன் தொடர்ச்சியாக விண்வெளி வீரர்கள் அனைவரும் காவல்துறையினர் பாதுகாப்புடன் ஷென்ஜோ -12 விண்கலம் செலுத்தப்பட இருந்த ஜுகுவான் ஏவுதளத்திற்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு காவல்துறையினர் மரியாதை செலுத்தியதை அடுத்து அவர்கள் விண்கலத்திற்குள் அழைத்து செல்லப்பட்டனர். 


இதனையடுத்து ஷென்ஜோ -12 விண்கலம் 3 விண்வெளி வீரர்களையும் தாங்கி விண்ணிற்கு செலுத்தப்பட்டது. விண்வெளி மையத்திற்கு செல்லும் மூவரும் சுமார் 3 மாதங்கள் சீன விண்வெளி நிலையத்தில் தங்கி இருப்பர். இந்த நடவடிக்கை விண்வெளி ஆய்வில் புதிய மைல்கல் என சீனா பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது.



Tags : Space Station ,China , China, space station, 3 soldiers, new milestone
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...