×

அதிக கோல் அடித்து ரொனால்டோ சாதனை

புடாபெஸ்ட்: ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில், போர்ச்சுகல் நட்சத்திரம் கிறிஸ்டொயானோ ரொனால்டோ முதல் இடத்துக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார். நடப்பு யூரோ தொடரின் எப் பிரிவு லீக் ஆட்டத்தில் போர்ச்சுகல் - ஹங்கேரி அணிகள் மோதின. நடப்பு சாம்பியனுக்கு எதிராக தற்காப்பு ஆட்டத்தில் அசத்திய ஹங்கேரி வீரர்கள் 84வது நிமிடம் வரை கோல் ஏதும் விட்டுக்கொடுக்காமல் வெறுப்பேற்றினர். இப்போட்டியை காண 60,000க்கும் அதிகமான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.போட்டி நிச்சயமாக டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போர்ச்சுகல் வீரர் குவரெய்ரோ 84வது நிமிடத்தில் முதல் கோல் அடித்து அந்த அணிக்கு முன்னிலை கொடுத்தார். இதைத் தொடர்ந்து, 87வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் கோல் போட்டு அசத்திய ரொனால்டோ, கடைசி விநாடிகளில் (90’+2) அற்புதமான ஒரு பீல்டு கோல் அடிக்க... போர்ச்சுகல் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஹங்கேரியை வீழ்த்தி 3 புள்ளிகளை தட்டிச் சென்றது.

விறுவிறுப்பான இந்த போட்டியில் 2 கோல் அடித்ததன் மூலமாக, யூரோ கோப்பை பைனல்ஸ் தொடரில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் பிரான்ஸ் வீரர் மைக்கேல் பிளாட்டினியை (9 கோல்) பின்னுக்குத் தள்ளி 11 கோல்களுடன் முதலிடத்துக்கு முன்னேறினார் ரொனால்டோ. இங்கிலாந்தின் ஷியரர் (7 கோல்) 3வது இடத்தில் உள்ளார். கிரீஸ்மேன் (பிரான்ஸ்), ரூனி (இங்கி.) உள்பட 7 வீரர்கள் தலா 6 கோல் அடித்து அடுத்த இடத்தில் உள்ளனர். சர்வதேச போட்டிகளில் தாய்நாட்டுக்காக அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ள ரொனால்டோ (106 கோல்), ஈரான் வீரர் அலி டையி (109) சாதனையை சமன் செய்ய இன்னும் 3 கோல் அடித்தால் போதும். இந்த தொடரிலேயே அவர் இந்த சாதனையையும் நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  எப் பிரிவில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் உலக சாம்பியன் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது. ஜெர்மனி வீரர் ஹம்மெல்ஸ் 20வது நிமிடத்தில் ‘ஓன் கோல்’ போட்டது பிரான்ஸ் அணிக்கு வெற்றியைத் தந்தது.

கோலாவுக்கு நோ!
ஹங்கேரி அணியுடனான லீக் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த போர்ச்சுகல் அணி கேப்டன் ரொனால்டோ, டேபிளில் வைக்கப்பட்டிருந்த கோகோ கோலா பாட்டில்களை ஓரமாகத் தள்ளி வைத்துவிட்டு  தண்ணீர் பாட்டிலை கையில் எடுத்து போர்ச்சுகீசிய மொழியில் ‘அகுவா’ என்று உரத்த குரலில் உச்சரித்தார். குளிர்பானங்களுக்கு பதிலாக மக்கள் தண்ணீரை குடிக்க வலியுறுத்தும் வகையில் அமைந்த அவரது செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி லைக்குகளை அள்ளி வருகிறது. இது யூரோ தொடரின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சர்களில் ஒன்றான கோகோ கோலா நிறுவனத்துக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், அதன் பங்குகளும் சரிவை சந்தித்தன.

Tags : Ronaldo , Ronaldo's record for most goals scored
× RELATED 38 வயதிலும் கலக்கி வரும் கிறிஸ்டியானோ...