×

சென்னை மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு கடல்நீரை குடிநீராக்கும் நிலைய பணிகளை திட்ட காலத்துக்கு முன்பே முடிக்க வேண்டும்: வாரிய மேலாண்மை இயக்குநர் அதிகாரிகளுக்கு உத்தரவு

சென்னை: சென்னை மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் நடைபெறும் பணிகளை திட்ட காலத்துக்கு முன்பே முடிக்க வேண்டும் என்று சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலியில் இயங்கி வரும் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் சுத்திகரிப்பு  நிலையத்தை சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் விஜயராஜ்குமார் நேற்று பார்வையிட்டார். தொடர்ந்து, அருகில் அமையவுள்ள நாளொன்றுக்கு 150 மில்லியன் கன லிட்டர் திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தில் நடந்து வரும் கடல் நீரை உள்வாங்கும் ஆழ்நிலை நீர்த்தேக்க தொட்டி, கரைந்த காற்று நிறைத்தல்  தொட்டி, வடிகட்டப்பட்ட கடல் நீர்த்தேக்க தொட்டி, நுண் வடிகட்டி மற்றும் எதிர்மறை சவ்வூடு பரவல் கட்டிடம், சுத்திகரிக்கப்பட்டு சேகரிக்கும் நீர்த்தேக்க தொட்டி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட நீர் உந்து நிலையம் ஆகியவற்றின் கட்டுமான பணிகளை அவர் ஆய்வு செய்தார்.

மேலும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை  நிலையத்தில் இருந்து விநியோகம் செய்ய பல்லாவரம் வரை 40 கிலோ மீட்டர் நீளத்திற்கு 1400/1200 மில்லி மீட்டர் விட்டமுள்ள குழாய் பதிக்கும் பணி மற்றும் சோழிங்கநல்லூரில் அமையவுள்ள 6.80 மில்லியன் கன லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர் தேக்க தொட்டி மற்றும் நீர் உந்து நிலையத்தின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். அப்போது, கட்டுமான பணிகள் மற்றும் குழாய் பதிக்கும் பணிகளை திட்டமிட்ட காலத்திற்கு முன்பே விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என வாரிய அதிகாரிகளுக்கும் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கும் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது பொறியியல் இயக்குநர் மதுரை நாயகம், தலைமை பொறியாளர்கள் ராசாராம், சமிலால் ஜான்சன், மேற்பார்வை பொறியாளர் மோகன், செயற்பொறியாளர் கிருபாகரவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Seawater Drinking Centre ,Chennai ,Board Management Directorate , Considering the drinking water needs of the people of Chennai, the seawater treatment plant should be completed before the project period: Board Managing Director instructs officials
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...