×

டிஏபி உர மானியம் 700 ஆக அதிகரிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: டிஏபி உரத்திற்கான மானியத்தை மூட்டைக்கு 700 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டில் யூரியாவுக்கு அடுத்தப்படியாக, டி-அம்மோனியம் பாஸ்பேட் (டிஏபி) உரம் மிகவும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இந்த உரம் 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை 1700க்கு விற்பனை செய்யப்பட்டது. இதில், 500 மானியமாக வழங்கப்பட்டது. இதனால், விவசாயிகளுக்கு ஒரு மூட்டை 1,200 என, உற்பத்தி நிறுவனங்கள் இதை விற்பனை செய்து வந்தது. கடந்த மாதம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக்  கூட்டத்தில் டிஏபி உரத்திற்கான மானியத்தை 140 சதவீதம் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்தது.

இதில், டிஏபி உரத்திற்கான மானியத்தை மூட்டைக்கு 700 ஆக உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. உரத்திற்கான மானியம் உயர்வால் அரசுக்கு 14,775 கோடி கூடுதல் செலவாகும் என கூறப்படுகிறது. ஏற்கனவே, யூரியாவுக்கான மானியமாக 900 வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஆழ்கடல் திட்டம்: ஆழ்கடலில் உள்ள வளங்களை கண்டறியவும், அதை பயன்படுத்துவதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்கவும், ‘ஆழ்கடல் திட்டம்’ உருவாக்கப்பட உளளது. இதற்கும் மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்தின் கீழ் கடலில் 6,000 மீட்டர் ஆழத்தில் உள்ள கனிம வளங்களை கண்டுபிடிக்க ஆய்வுகள் நடத்தப்பட உள்ளது.


Tags : DAP Fertilizer Subsidy Increased to 700: Union Cabinet Approval
× RELATED மே-02: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!