×

ஆழ்வார்பேட்டை, நந்தனம், லாயிட்ஸ் காலனி உள்ளிட்ட 6 ரேஷன் கடைகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு; பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண தொகை 2,000 வழங்கினார்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிவாரண உதவித்தொகையாக 2 ஆயிரம், 14 வகையான மளிகை பொருட்கள் நேற்று 2வது நாளாக வழங்கப்பட்டு வருகிறது. சென்னை, ஆழ்வார்பேட்டை, நந்தனம், லாயிட்ஸ் காலனி பகுதிகளில் உள்ள 6 ரேஷன் கடைகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை திடீரென ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் அறிக்கையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கலைஞர் பிறந்த நாளில் 4000 வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதியளித்திருந்தார். அதன்படி திமுக ஆட்சிக்கு வந்ததும், கொரோனா நிவாரண தொகை முதல் தவணையாக 2000 கடந்த மே மாதம் வழங்கப்பட்டது. 2வது நாளாக நேற்று அனைத்து ரேஷன் கடைகளிலும் தலா 2 ஆயிரம் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் இருந்து நேற்று காலை 10 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகம் புறப்பட்டார். அப்போது திடீரென ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள ரேஷன் கடை அருகே, தனது காரை நிறுத்தி, அந்த ரேஷன் கடைக்கு சென்றார். அப்போது அங்கு நிவாரண பொருட்கள் வாங்க வந்தவர்கள் முதல்வரை பார்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ரேஷன் கடைக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், வரிசையில் நின்ற பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண தொகையான 2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகை பொருட்களை அவரே வழங்கினார். பின்னர், ரேஷன் கடையில் இதுவரை நிவாரண பொருட்கள் வாங்கி சென்றவர்களின் பட்டியல் அடங்கிய பதிவேட்டை ஆய்வு செய்தார். ரேஷன் கடை ஊழியர்களிடம் பொதுமக்களுக்கு காலதாமதமின்றி  பொருட்களை வழங்கி, சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.  

இதையடுத்து அங்கிருந்த பொதுமக்களிடம் வணக்கம் கூறிவிட்டு, மு.க.ஸ்டாலின் புறப்பட்டு சென்றார். அப்போது, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தார். எந்தவித முன்னேற்பாடுகளும் இல்லாமல், நேற்று காலை திடீரென ஆழ்வார்பேட்டை ரேஷன் கடையை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்ததை அங்கிருந்த பொதுமக்கள் பாராட்டினர். இதைத்தொடர்ந்து சென்னை, நந்தனம் மற்றும் லாயிட்ஸ் காலனி பகுதி என மொத்தம் 6 ரேஷன் கடைகளில் முதல்வர் நேற்று ஆய்வு செய்து பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண தொகை 2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகை பொருட்களை வழங்கினார்.

Tags : Chief Minister ,MK Stalin ,Alwarpet ,Nandanam ,Lloyds Colony ,Corona , Chief Minister MK Stalin's inspection of 6 ration shops including Alwarpet, Nandanam and Lloyds Colony; Corona provided a relief amount of 2,000 to the public
× RELATED டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு...