×

கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் - 5 மருந்துகளுக்கு இடையே இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு தடுப்பூசிகள் என்னென்ன?.. ‘டபுள்யூஹெச்ஓ’ அங்கீகரித்த 2 சீன தடுப்பூசிகளுக்கு அனுமதி மறுப்பு

புதுடெல்லி: இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் - 5 ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், மேலும் சில வெளிநாட்டு தடுப்பூசிகள் அடுத்த சில மாதங்களில் இந்தியாவுக்கு வரவுள்ளன. அதேநேரம் உலக சுகாதார நிறுவனம் (டபுள்யூஹெச்ஓ) அங்கீகரித்த சீனாவின் 2 தடுப்பூசிகளை இந்தியா கொள்முதல் செய்வதில்லை என்ற முடிவை எடுத்துள்ளது. நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16ம்தேதி கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டு, முதல்கட்டமாக சுகாதார ஊழியர்களுக்கும் முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. கடந்த மார்ச் மாதம் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், ஏப்ரலில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசிபோடும் பணி தொடங்கியது. கடந்த மே மாதம் முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்தியாவை பொறுத்தமட்டில் இரண்டு தடுப்பூசிகள் மட்டுமே பெரிய அளவில் பயன்படுத்தப்படுகின்றன. கோவாக்சின் தடுப்பூசியானது உள்நாட்டில் தயாரிக்கப்படுகிறது. பாரத் பயோடெக் - ஐசிஎம்ஆர் இணைந்து உருவாக்கியுள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசியானது பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு - அஸ்ட்ராஜெனெகா மற்றும் இந்தியாவின் சீரம் நிறுவனம் இணைந்து உற்பத்தி செய்கிறது. ரஷ்ய தடுப்பூசியான ஸ்புட்னிக்-5,  டாக்டர் ரெட்டி ஆய்வகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த தடுப்பூசி தற்போது சில தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே கிடைக்கிறது. இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமையகம் (டி.சி.ஜி.ஐ) தகவலின்படி, ஃபைசர், மாடர்னா போன்ற தடுப்பூசிகள் விரைவில் இந்தியாவுக்கு வரவுள்ளன.

காரணம், வெளிநாட்டு தடுப்பூசிகளை பரிசோதிக்கும் முறையை, இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமையகம் ரத்து செய்துள்ளது. அதனால், வெளிநாட்டு தடுப்பூசி சப்ளை துரிதப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற 21ம் தேதி முதல் மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் (18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும்) என்று பிரதமர் மோடி அறிவித்த நிலையில், தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. இருப்பினும், நாட்டின் மக்கள்தொகையில் 15% அளவிற்கு மட்டுமே ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  வரும் டிசம்பர் மாதத்திற்குள் 2.16 கோடி தடுப்பூசி மருந்துகள் கிடைக்கும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

இந்த இடைப்பட்ட காலகட்டத்தில், கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் - 5 ஆகிய தடுப்பூசிகளுடன் சேர்த்து மேலும் சில தடுப்பூசிகள் நடைமுறைக்கு வரும் என்கின்றனர். இதுகுறித்து, இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமையக வட்டாரங்கள் கூறுகையில், ‘இதுவரை 25 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டாளரான யு.எஸ்.எஃப்.டி.ஏ, ஐரோப்பிய ஒன்றிய மருந்து கட்டுப்பாட்டாளரான இ.எம்.ஏ, இங்கிலாந்து மருந்து கட்டுப்பாட்டாளரான யுகே எம்.எச்.ஆர்.ஏ, ஜப்பானிய மருந்து கட்டுப்பாட்டாளரான பி.எம்.டி.ஏ மற்றும் உலக சுகாதார நிறுவனம் ஆகியோரால் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பட்டியலிடப்பட்ட தடுப்பூசிகள், இந்தியாவில் அவசரகால பயன்பாட்டு ஒப்புதல் வழங்கப்படும்.

தற்போது, ​​மாடர்னா, ஃபைசர், ஜான்சன் அண்ட் ஜான்சனின் தடுப்பூசி மட்டுமே அமெரிக்காவில் ஒப்புதல் பெற்றுள்ளது. இந்த மூன்றையும் தவிர, அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி ஐரோப்பிய ஒன்றியத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஃபைசர், மாடர்னா மற்றும் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகள் இங்கிலாந்தில் நடைமுறைக்கு வந்துள்ளன. ஜப்பானில் ஃபைசர் தடுப்பூசி மட்டுமே போடப்படுகிறது. உலக சுகாதார நிறுவனத்தை பொறுத்தமட்டில்,  ஃபைசர், அஸ்ட்ராஜெனெகா, சினோஃபார்ம் மற்றும் சினோவாக் ஆகிய நான்கு தடுப்பூசிகளை மட்டுமே அனுமதித்துள்ளது. எனவே, ஃபைசர், மாடர்னா, சினோஃபார்ம், சினோவாக், ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய தடுப்பூசிகள் இந்தியாவில் அவசர பயன்பாட்டுக்கான ஒப்புதலை பெற முடியும்.

ஆனால், சீன தடுப்பூசிகளான சினோவாக் மற்றும் சினோஃபார்ம் தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் ஒப்புதல் வழங்கப்படுமா? என்பது தெரியவில்லை. இந்தியாவில் நேரடியாக தடுப்பூசி சப்ளை செய்யும் வெளிநாடுகளின் பட்டியலில் சீனா இல்லை. ஆனால் உலக சுகாதார நிறுவனம் கடந்த மே 7ம் தேதி சீன தயாரிப்பு தடுப்பூசியான சினோஃபார்முக்கும், ஜூன் 1ம் தேதி மற்றொரு சீன தடுப்பூசியான சினோவாக்குக்கு அங்கீகாரம் அளித்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள மூன்று தடுப்பூசிகளின் ஒன்றான கோவிஷீல்டு தடுப்பூசி உள்நாட்டில் தயாரிக்கப்பட்டாலும், வெளிநாட்டு நிறுவனத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் வெளிநாட்டு தடுப்பூசி ஆகும்.

இதனுடைய செயல்திறன் 71 சதவீதம் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இங்கிலாந்தின் சுகாதார வாரியம், ஐரோப்பிய மருத்துவ ஒன்றியம் மற்றும் உலகின் பல நாடுகளில் கோவிஷீல்டுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்தியாவில் இருந்து பல நாடுகளுக்கு கோவிஷீல்டு விற்கப்படுகிறது. கோவிஷீல்டை போன்றே வெளிநாட்டு தடுப்பூசி என்ற முறையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக்-5, கடந்த பிப்ரவரி முதல் இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டது. இந்த தடுப்பூசியை இந்திய மருந்து நிறுவனமான டாக்டர் ரெட்டீஸ் லேப் இந்தியாவிலேயே தயாரிக்கிறது. கடந்த மே 15ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இம்மாதம் மூன்றாம் வாரத்தில் இருந்து பொதுபயன்பாட்டிற்கு வரும்.இந்த தடுப்பூசி 91.6 சதவீதம் செயல்திறன்மிக்கது என்று மருத்துவ பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. இதுமட்டுமின்றி, ரஷ்யாவின் ஒற்றை டோஸ் தடுப்பூசியான ‘ஸ்புட்னிக் லைட்’ விரைவில் இந்தியாவில் அனுமதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதுநடைமுறைக்கு வரும்பட்சத்தில், இந்தியாவில் பயன்படுத்தப்படும் முதல் ஒற்றை டோஸ் தடுப்பூசியாக ‘ஸ்பூட்னிக் லைட்’இருக்கும்.  உலகின் மிகப்பெரிய தடுப்பூசி மற்றும் மருந்து நிறுவனங்களின் ஒன்றான ஃபைசர்-பேயன்டெக் தடுப்பூசியானது, ஜூலை மாதத்திற்குள் இந்தியாவுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த தடுப்பூசி ஜூலை முதல் அக்டோபர் வரை 50 மில்லியன் அளவுகளை சப்ளை செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஃபைசர் தடுப்பூசியானது 12 முதல் 18 வயதுடையோருக்கும் போட அனுமதிக்கப்பட்டுள்ளதால், இந்த தடுப்பூசி இந்தியாவுக்கு வரும்போது, சிறார்களுக்கும் கிடைக்க வாய்ப்புள்ளது. மாடர்னா தடுப்பூசியை இந்திய மருந்து நிறுவனமான சிப்லாவுடன் இணைந்து தயாரிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. எனவே, மாடர்னா தடுப்பூசி, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வர வாய்ப்புள்ளது. மாடர்னாவின் செயல்திறன் 94 சதவீதம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
 அடுத்ததாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் ஐதராபாத்தில் உள்ள ‘பயோ-இ’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த மருந்து, ‘ஸ்பூட்னிக் லைட்’டைப் போலவே, ஒற்றை டோஸ் தடுப்பூசியாகும்.

இதன் செயல்திறன் 66 சதவீதம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி பயன்படுத்த அமெரிக்கா ஒப்புதல் அளித்தது. இதுமட்டுமின்றி, கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரிக்கும் நிறுவனமான சீரம், அமெரிக்க தடுப்பூசியான நோவாவாக்ஸை தயாரிக்க முடிவு செய்துள்ளது. இந்தியாவில் இந்த தடுப்பூசியை ‘ஆஃப் கோவோவாக்ஸ்’ என்ற பெயரில் விற்கப்படும். இந்தாண்டு இறுதிக்குள் இந்த தடுப்பூசி இந்தியாவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த தடுப்பூசியை பயன்படுத்த எந்த நாடும் இதுவரை அனுமதிக்கவில்லை. வரும், ஜூலை மாதத்திற்குள் அவசர ஒப்புதல் கிடைக்கும் என்று அந்நிறுவனம் எதிர்பார்த்துள்ளது’என்றன.

எனவே,  இரட்டை டோஸ் தடுப்பூசிகளான கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் - 5, ஃபைசர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகியனவும், ஒற்றை டோஸ் தடுப்பூசிகளான ஆஃப் கோவோவாக்ஸ், ஸ்புட்னிக் லைட் ஆகியவையும் இந்திய பயன்பாட்டு லிஸ்டில் உள்ளன. ஆனால், உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட சீனாவின் சினோவாக் மற்றும் சினோஃபார்ம் தடுப்பூசிகள் இந்தியாவில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள் பட்டியலில் இல்லை. காரணம், இந்திய - சீன எல்லையில் நடந்த மோதல்களின் தொடர்ச்சியாக இருநாடுகளுக்கு இடையே கடந்த ஓராண்டுக்கு மேலாக உறவு பாதிக்கப்பட்டுள்ளது.

அதனால், சீன பொருட்கள் பயன்பாட்டை இந்தியா வெகுவாக தடை செய்தும், குறைத்தும் கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்திய - சீன எல்லையில் நடந்த மோதல்களின் தொடர்ச்சியாக, இருநாடுகளுக்கு இடையே கடந்த ஓராண்டுக்கு மேலாக உறவு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், தடுப்பூசி உட்பட சீன பொருட்கள் பயன்பாட்டை இந்தியா வெகுவாக தடை செய்தும், குறைத்தும் கொண்டது.

யார் யாரோடு ஒப்பந்தம்?

இரண்டு டோஸ் அவசியம்
கோவாக்சின் : பாரத் பயோடெக் - ஐசிஎம்ஆர் (இந்தியா)
கோவிஷீல்டு : ஆக்ஸ்போர்டு - இந்தியாவின் சீரம்
ஸ்புட்னிக் - 5 : ரஷ்ய நேரடி முதலீட்டு நிறுவனம் - இந்தியாவின் டாக்டர் ரெட்டீஸ்
மாடர்னா          : மாடர்னா - இந்தியாவின் சிப்லா
ஜான்சன் அண்ட் ஜான்சன் : ஜான்சன் அண்ட் ஜான்சன் - இந்தியாவின் பயோ-இ
ஃபைசர் : அமெரிக்காவின் பேயன்டெக்

ஒரு டோஸ்  போதும்
ஆஃப் கோவோவாக்ஸ் : அமெரிக்காவின் நோவாவாக்ஸ் - இந்தியாவின் சீரம்
ஸ்புட்னிக் லைட் : ரஷ்ய நேரடி முதலீட்டு நிறுவனம் - இந்தியாவின் ரெட்டீஸ்

Tags : India ,Kovakin ,Govisield ,Sputnik ,WHO , What are the foreign vaccines coming to India between Kovacsin, Covshield, Sputnik-5 drugs?
× RELATED இந்தியா கூட்டணி கட்சிகள் கலந்தாலோசனை...