குற்றாலத்தில் தொடர் சாரல்: அருவிகளில் வெள்ளப்பெருக்கு

தென்காசி: குற்றாலத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் சாரல் காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களில் பெய்யும் தென்மேற்கு பருவமழை சீசன் காலம் என அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு சீசன், ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் துவங்கிய நிலையில் கடந்த மூன்று தினங்களாக பகல் மற்றும் இரவு வேளைகளில் அவ்வப்போது தொடர்ந்து  சாரல் மழை பெய்து வருகிறது. சாரல் காரணமாக இன்று காலையில் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயினருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் கொட்டுகிறது.

ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. ஊரடங்கு அமலில் இருப்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. அனைத்து அருவிகளிலும் போலீசார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் விரைவில் குளிக்க அனுமதிக்க வேண்டுமென்று சுற்றுலாப் பயணிகளும், குற்றாலம் பகுதி மக்களும் விரும்புகின்றனர்.

Related Stories: