×

சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி கராத்தே பயிற்சியாளர் கெபிராஜுக்கு ஜாமின் வழங்க மறுப்பு..!!

சென்னை: சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் கெபிராஜுக்கு ஜாமின் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னை அண்ணா நகரில் கராத்தே பயிற்சி பள்ளி நடத்தி வந்தவர் கெபிராஜ். இவர் போரூரை அடுத்த கிருகம்பாக்கத்தில் இருக்கக்கூடிய பத்ம சேஷாத்ரி பள்ளியில் கராத்தே பயிற்சியாளராக பணிபுரிந்த போது அங்கு பயின்ற மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 7 ஆண்டுகளுக்கு பிறகு புகார் அளிக்கப்பட்டது. 


அதனடிப்படையில் இந்த புகாரை அண்ணாநகர் மகளிர் போலீசார் விசாரித்து கெபிராஜ் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.  இதையடுத்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு அவர்கள் கெபிராஜை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தார்கள். இதற்கிடையே ஜாமின் கேட்டு சென்னை முதன்மை நீதிமன்றத்தில் கெபிராஜ் மனுத்தாக்கல் செய்திருந்தார். 


இந்த மனு மீதான விசாரணை என்பது நீதிபதி ஆர்.செல்வகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அச்சமயம் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 7 ஆண்டுகளுக்கு பிறகு புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இது பொய் புகார் என்று வாதிட்டார். மேலும் மனுதாரர் 2 வாரங்களுக்கு மேலாக காவலில் உள்ளார். போலீசார் விசாரணையை முடிந்துவிட்டதால் கெபிராஜுக்கு ஜாமின் வழங்க வேண்டும் என தெரிவித்தார். 


இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு வழங்கறிஞர், பாலியல் புகார் அளித்துள்ள மாணவி மட்டுமின்றி தன்னிடம் பயிற்சி பெற்ற வேறு சில மாணவிகளிடமும் தவறான முறையில் கெபிராஜ் நடந்துக் கொண்டிருக்கிறார். இதில் சிறுமிகளும் அடங்குவர். தனக்கு 13 வயது இருக்கும் போது பாலியல் தொல்லை அளித்ததாக பெண் ஒருவரும் புகார் அளித்துள்ளார். 


இந்த புகார் என்பது போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது என்பதினால் ஜாமின் வழங்கக்கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மனுதாரர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதால் தற்போதைய சூழலில் அவருக்கு ஜாமின் வழங்கமுடியாது என்று கூறி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறார்.



Tags : Chennai Padma Cheshadri School Karate ,Kepraj ,Jamin , Padma Seshadri School, Karate Coach Kepraj, Jamin
× RELATED கவிதா ஜாமின் வழக்கு: டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இன்று விசாரணை