×

தம்மல்ஸின் ‘ஓன் கோல்’ஜெர்மனியை வீழ்த்தி பிரான்ஸ் வெற்றி

முனிச்: ஜெர்மனி வீரர் தம்மல்சின் தவறுதலான கோலால் (ஓன் கோல்) பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை ஜெர்மனியின் முனிச் நகரில் நடந்த போட்டியில் பிரான்ஸ்-ஜெர்மனி அணிகள் மோதின. இரு அணிகளுமே வலிமையான அணி என்பதால், துவக்கம் முதலே போட்டி விறுவிறுப்பாக இருந்தது. மாறி, மாறி பந்தை கடத்தி கொண்டு கோல் போஸ்ட்டுக்கு அருகே இரு அணிகளும் கொண்டு சென்று முட்டி மோதின. இருப்பினும் தடுப்பாட்ட வீரர்கள் மிகத் திறமையாக செயல்பட்டு எதிரணியின் வியூகங்களை முறியடித்தனர். இதனால் ஆட்டம் மிகவும் பரபரப்பான நிலையை எட்டியது.

ஆனால் ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர்  பால் போக்பா, கோல் போஸ்ட்டுக்கு வலது ஓரத்தில் இருந்து பந்தை இடது ஓரத்தில் பாய்ந்து வந்து கொண்டிருந்த ஹெர்னாண்டசுக்கு பாஸ் செய்ய முயன்றார். மிகச் சரியாக கோல் போஸ்ட்டுக்கு முன்பு ஜெர்மன் வீரர் தம்மல்ஸ் அந்த பந்தை உதைத்து, வெளியே தள்ள முயற்சித்தார். ஆனால் பரிதாபம்... அந்த பந்து எதிர்பாராத விதமாக கோல் போஸ்ட்டுக்குள் நுழைந்து கோலாக மாறியது. ஜெர்மனியின் கோல் கீப்பரால் அந்த பந்தை தடுக்க முடியவில்லை. இதையடுத்து 1-0 என முன்னிலை பெற்ற பிரான்ஸ், அதன் பின்னர் முற்றிலும் தடுப்பாட்டத்தை கடைபிடித்தது. ஜெர்மனியின் முன்கள வீரர்கள் பாய்ந்து, பாய்ந்து போராடினார்கள்.

2 முறை அவர்கள் உதைத்த பந்து நெட்டுக்குள் போய் விழுந்தது. ஆனால் நடுவர்களால் அது துரதிருஷ்டவசமாக ஆஃப் சைட் என அறிவிக்கப்பட்டது. இறுதியில் இப்போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வெற்றி பெற்றது. சொந்த மண்ணில் ஓன் கோலால் தோல்வியடைந்த ஜெர்மனி அணியின் வீரர்கள் மிகச் சோகமாக ஆடுகளத்தில் இருந்து வெளியேறினர்.

இன்று இத்தாலி-ஸ்விட்சர்லாந்து மோதல்
இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு செயின்ட்பீட்டர்ஸ்பர்க்கில் (ரஷ்யா) நடைபெறும் போட்டியில் ரஷ்யாவை எதிர்த்து பின்லாந்து அணி மோதுகிறது. இரவு 9.30 மணிக்கு பாகு நகரில் (அஜர்பைஜான்) நடைபெறும் போட்டியில் துருக்கி-வேல்ஸ் அணிகள் மோதவுள்ளன. இன்று இரவு 12.30 மணிக்கு ரோமில் நடைபெறவுள்ள மற்றொரு போட்டியில் இத்தாலியை எதிர்த்து ஸ்விட்சர்லாந்து களம் இறங்குகிறது.

Tags : France ,Tammels' ,Germany , France beat Germany's own goal '
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...