பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் அகிலேஷ் யாதவுடன் சந்திப்பு!: கட்சி உடையும் சூழலால் மாயாவதி அதிர்ச்சி..!!

லக்னோ: உத்திரப்பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கு 9 மாதங்களே இருக்கும் நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி உடையும் சூழல் உருவாகியிருப்பது அக்கட்சியின் தலைவர் மாயாவதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேர் சமாஜ் வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்து பேசி இருப்பது பல்வேறு யூகங்களை கிளப்பி உள்ளது. 

பகுஜன் சமாஜ் கட்சியில் தனி அணியாக செயல்பட இருப்பதாக அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ஒருவரான அஸ்லம் ரெய்னி கூறியிருக்கிறார். அதிருப்தி எம்.எல்.ஏக்கள் லால்ஜி வர்மா தலைமையில் புதிய அணி இயங்கும் என்றும் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து மேலும் பல எம்.எல்.ஏக்கள் தங்கள் அணியில் இணைய இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். 

சமாஜ் வாதி கட்சியில் இணைந்தால் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்களுக்கு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என்று அகிலேஷ் யாதவ் உறுதி அளித்திருப்பது தெரியவந்துள்ளது. இதனால் சமாஜ் வாதி கட்சியில் இணைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. உத்திரப்பிரதேச சட்டமன்றத்தில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 18 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Related Stories: