×

இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள புதிய டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் கவலைக்குரியதாக இல்லை : ஒன்றிய அரசு விளக்கம்

டெல்லி :இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகையான டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் கவலைக்குரியதாக இல்லை என்று ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. கொரோனா வைரஸ் பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து உலகின் பல்வேறு நாடுகளில் 2, 3வது அலைகளை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் இந்தியாவில் உருமாற்றம் அடைந்துள்ள டெல்டா என்று பெயரிடப்பட்ட கொரோனா வைரஸ், 2வது அலையில் கடுமையான உயிர் சேதங்களை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் டெல்டா வைரஸ் மேலும் உருமாற்றம் அடைந்து டெல்டா ப்ளஸ் ஆக  தோன்றி இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.நாடு முழுவதுமான கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த நிதி ஆயோக் உறுப்பினர் வி.கி.பால்,  உருமாற்றம் அடைந்த டெல்டா கொரோனா வைரஸ் மார்ச் மாதம் மராட்டியத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறினார். இது கவலை அளிக்கக் கூடிய வகையில் உருவெடுக்கவில்லை என்று கூறிய அவர், ஒன்றிய அரசு இது குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்தார்.

உலகளாவிய தரவுகளின் அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்ட டெல்டா பிளஸ் வைரஸ், ஐரோப்பாவில் ஜூன் மாதம் பொதுத் தளத்தில் அறிவிக்கப்பட்டது. உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் கொரோனா, மனித செல்களில் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்தில் வேகமாக பரவி வரும் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ், கனடா, ஜெர்மனி, ரஷியா, ஸ்விட்சர்லாந்து, போலந்து, போர்ச்சுகல், ஜப்பான் மற்றும் அமெரிக்காவிலும் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்திக் கொண்டவர்களுக்கு டெல்டா பிளஸ் வைரஸ் அதிக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதும் இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துளளது.


Tags : India ,US government , டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ்
× RELATED புதுவை அரசை கண்டித்து கவர்னர் மாளிகையை இந்தியா கூட்டணி முற்றுகை