×

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மதிப்பெண் வெயிட்டேஜ் முறையில் மார்க் வழங்க திட்டம்: ஓரிரு நாளில் அறிவிப்பு

புதுடெல்லி: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘வெயிட்டேஜ்’ முறையில் மதிப்பெண் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. கொரோனா 2வது அலையின் தீவிர தாக்குதல் காரணமாக, பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. இதனால், மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை கருதி சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வை மத்திய அரசு ரத்து செய்தது. தேர்வை ரத்து செய்ய உத்தரவிடும்படி மாணவர்கள், பெற்றோர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு அடிப்படையில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்தது. மேலும், 12ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், இந்த மாணவர்களுக்கு எதன் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளது என்பதை 2 வாரங்களுக்குள் அறிக்கையாக தாக்கல் செய்யும்படி சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ நிர்வாகங்களுக்கு கடந்த 3ம் தேதி உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, மதிப்பெண் வழங்கும் நடைமுறை குறித்து பரிந்துரை செய்யும்படி 13 பேர் கொண்ட குழுவை சிபிஎஸ்இ நியமித்துள்ளது. இந்நிலையில், இக்குழுவின் பரிந்துரை அடிப்படையில், மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் பெற்ற மதிப்பெண், 11, 12ம் வகுப்புகளில் பள்ளிகள் நடத்திய தேர்வுகள், உள்மதிப்பீடு மற்றும் இந்தாண்டு நடைபெற்ற செயல்முறை தேர்வு ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு, ‘வெயிட்டேஜ்’ முறையில் 12ம் வகுப்பு மதிப்பெண்களை வழங்க சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அடுத்த ஓரிரு நாளில் சிபிஎஸ்இ நிர்வாகம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : CBSE Class 12 Score Weightage Scheme: One or two days notice
× RELATED பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே...