×

என்னுடன் பேசியதற்காக கட்சி தொண்டர்களை நீக்குவதா? அதிமுக சாதி கட்சியாகவே மாறிவிட்டது: இனியும் சும்மா இருக்க மாட்டேன்; சசிகலா பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: என்னுடன் பேசியதற்காகவே கட்சியில் இருந்து உண்மையான தொண்டர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதிமுக ஒரு சாதி கட்சியாகவே மாறிவிட்டதாக பலரும் புகார் கூறி வருகிறார்கள். இனியும் இதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது என சசிகலா தனது ஆதரவாளர் ஒருவரிடம் பேசிய செல்போன் உரையாடல் வெளியாகியுள்ளது. அரசியல் களத்தில் இருந்து ஒதுங்கி இருப்பதாக தெரிவித்திருந்த சசிகலா கடந்த மாதம் முதல் தனது ஆதரவாளர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசி வருகிறார். ஒவ்வொரு தொண்டரிடமும், தான் விரைவில் உங்களை சந்திக்க இருப்பதாகவும், ஓபிஎஸ் மற்றும் எடப்பாடியின் அரசியல் நடவடிக்கைகள் தொண்டர்களுக்கு எதிராக இருப்பதாகவும் தெரிவித்தார். இதேபோல், நேற்று முன்தினம் நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், சசிகலாவின் நடவடிக்கைகளை எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், சசிகலாவுடன் பேசிய அதிமுக நிர்வாகிகள் 16 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களில் சசிகலாவின் ஆதரவாளராக இருந்த புகழேந்தியும் அடங்குவார். இந்தநிலையில், நேற்று தேனியை சேர்ந்த தனது ஆதரவாளர் சிவனேசன் என்பவருடன் சசிகலா பேசிய செல்போன் உரையாடல் வெளியாகியுள்ளது.

சிவனேசன் என்பவருடன் தொலைபேசியில் சசிகலா பேசியது: என்னை பொறுத்தவரை கட்சி நன்றாக இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறேன். கட்சியின் இன்றைய நிலையை பார்த்து என்னுடன் பேசும் கட்சியின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் மிகவும் வருத்தப்படுகிறார்கள். அதைக் கேட்கும் போது மிகவும்  வருத்தமாக இருக்கிறது. நீங்கள் வர வேண்டும், வந்தால் தான் கட்சி நல்லா இருக்கும் என கூறுகிறார்கள். கட்சி நன்றாக செயல்பட வேண்டும் என்று தான் நினைக்கிறேன். எதிர்கட்சியாக இருக்கும் பொழுது எப்படி செயல்பட வேண்டும் என்பது கூட தெரியாமல் தான் கட்சியை வழிநடத்தி கொண்டு இருக்கின்றனர். தலைவர் காலத்திலும் சரி ஜெயலலிதா காலத்திலும் சரி அதிமுக பொதுவான கட்சியாகவே செயல்பட்டது.

ஆனால் தற்போது அதிமுக சாதி கட்சியாக செயல்படுவதாக அனைத்து மாவட்ட தொண்டர்களும் கூறுகின்றனர். தமிழ்நாட்டின் இங்கு, இடுக்கில் இருந்து எல்லாருமே பேசுகிறார்கள். அவர்கள் அனைவரும் முதல் குற்றச்சாட்டாக சாதி கட்சி போல் செயல்படுவதாக தான் கூறுகிறார்கள். நீங்க கட்சியை காப்பாத்தனும் என்று கூறுகிறார்கள். இந்த நிலை முதலில் மாறவேண்டும். இதை செய்வதே என்னுடைய முதல் வேலை. கட்சியின் இன்றைய செயல்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள உண்மையான தொண்டர்கள் அனைவரையும் கட்டுப்படுத்தி வைத்துள்ளேன். இந்த கட்சி வீணாவதை பார்த்துகொண்டு இருக்க முடியாது. நாங்கள் வெற்றி பெறுவோம் என அவர்கள் கூறியதால் தானே நான் ஒதுங்கி இருந்தேன். இப்போது தொண்டர்கள் அழுவதை என்னால் எப்படி பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.

* எனக்கான நேரம் வந்துவிட்டது சசிகலா என்ற நான்.. தொண்டனுக்காக இருக்கிறேன்
என்னிடம் பேசினால் நீக்கிவிடுவோம் என்றால் தொண்டர்கள் இந்த கட்சிக்காக விசுவாசமாக இருந்தது தப்பா? இது தவறு  இல்லையா. முதுகில் இவர்கள் குத்தி குத்தி முதுகில் குத்துவதற்கு இடமே இல்லாத அளவிற்கு பண்ணிவிட்டார்கள். இப்போது தொண்டர்களையும் இதுபோல் பண்ண ஆரம்பித்தால் என்னால் எப்படி பார்த்துக்கொண்டு இருக்க முடியும். இதை வேடிக்கை பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்க முடியாது. தொண்டர்கள் நினைப்பதை செய்து காட்ட வேண்டும். தொண்டர்கள் நினைப்பதை செய்ய சசிகலா இருப்பேன். அதற்கான நேரம் தற்போது வந்துவிட்டது. கட்சியை காப்பாற்றுவதற்கு நான் உறுதியாக வந்தே தீருவேன். அடிமட்ட தொண்டர்கள் தான் எனக்கு முக்கியம். நிச்சயம் நல்லது நடக்கும்.

* ஓபிஎஸ்சை முதல்வராக தேர்வு செய்ய நினைத்தேன்
சசிகலா மேலும் கூறுகையில், கட்சிக்காக பாடுபட்ட உண்மையான தொண்டர்களை நீக்கி கொண்டே செல்வதால் கட்சிக்கு என்ன பயன்?. ஓரிருவர்களின் சுயநலத்திற்காக தொண்டர்களை பலிகடா ஆக்குவதா?. அந்த சமயத்தில் அவராகவே(ஓபிஎஸ்) தானே பா வெளியே போனார். அவர் வெளியே செல்லா விட்டால் அவரை தானே முதல்வரா உட்கார வைத்துவிட்டு சென்றிருப்பேன். வேறு வழியில்லாமல் இப்படி ஆகிவிட்டது என்றார்.

Tags : Sasikela , Dismiss party volunteers for talking to me? The AIADMK has become a caste party: I will no longer be idle; Sasikala charged with sedition
× RELATED நாம் ஒன்றாக வேண்டும்; அதிமுக வென்றாக...