×

பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின் கீழான மனுவை 2 மாதத்தில் முடிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை:  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பாலையன், தனது மகன் பட்டாபிராமனிடம் இருந்து ஜீவனாம்சம் கேட்டு திருவாரூர் வருவாய் கோட்டாட்சியருக்கு விண்ணப்பித்தார்.  விண்ணப்பத்தை பரிசீலித்த கோட்டாட்சியர், மாதம் 10 ஆயிரம் ரூபாயை ஜீவனாம்சமாக பாலையனுக்கு வழங்க உத்தரவிட்டார். இந்த உத்தரவின் அடிப்படையில் தனக்கு ஜீவனாம்சம் வழங்கவில்லை எனக் கூறி, திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு மேல்முறையீடு செய்தார். அதன் மீது எந்த முடிவும் எடுக்கப்படாததால், தனது மேல் முறையீட்டு மனுவை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்கக் கோரி பாலையன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்த போது, தனது சொத்துகளை எழுதி வாங்கிக் கொண்ட மகன் பட்டாபிராமன், வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்த உத்தரவுபடி ஜீவனாம்சம் வழங்கவில்லை என்று பாலையன் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, மூத்த குடிமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பதற்காகவே பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்பு சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டப்பிரிவின் கீழ் அளிக்கப்படும் விண்ணப்பங்களையும், மேல் முறையீட்டு மனுக்களையும் முடிவுக்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்படுத்துவது அதிகாரிகள் தங்கள் கடமையை செய்யத் தவறுவதற்கு சமம். எனவே, மனுதாரரின் மேல்முறையீட்டு மனு மீது எட்டு வாரங்களில் முடிவெடுக்க திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்படுகிறது. மேலும், பெற்றோர், மூத்த குடிமக்கள் நலன் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் விண்ணப்பங்கள், மேல் முறையீட்டு மனுக்களை இரண்டு மாதங்களில் முடிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப, தமிழக தலைமைச் செயலாளருக்கு உத்தரவிடுகிறேன் என்று நீதிபதி  உத்தரவிட்டுள்ளார்.

Tags : Petition under the Care of Parents and Senior Citizens Act to be completed within 2 months: High Court order to the State
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...