×

மாணவிகளை ரகசிய அறைக்கு அழைத்து சென்ற ஆசிரியைகள் மீது வழக்கு டேராடூன் மருத்துவமனையில் இருந்து சிவசங்கர் பாபா ரகசியமாக தப்பி ஓட்டம்: முக்கிய புள்ளிகள் ஆதரவுடன் மடத்தில் பதுங்கல்; சிபிசிஐடி தனிப்படை கைது நடவடிக்கை தீவிரம்

சென்னை: பாலியல் வழக்கில் சிக்கிய சிவசங்கர் பாபாவை கைது செய்ய சிபிசிஐடி தனிப்படை போலீசார் உத்தரகாண்ட்டில் முகாமிட்டு இருந்த நிலையில், டேராடூன் மருத்துவமனையில் இருந்து அவர் தப்பி ஓடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு  கேளம்பாக்கம் அடுத்த சாத்தங்குப்பம் பகுதியில் நடன சாமியார் சிவசங்கர் பாபா (72) என்பவர், 20 ஆண்டுகளாக ‘சுசில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியை நடத்தி வருகிறார். இவர் மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் பலர் பாலியல் புகார் கூறினர். அதை விசாரித்தபோது புகார் உண்மை என்று போலீசாருக்கு தெரியவந்தது. அதன்படி சிவசங்கர் பாபா மீது போக்சோ உள்பட பல்வேறு 3 பிரிவுகளின் கீழ் மாமல்லபுரம் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் அவர் வட இந்தியாவிற்கு தப்பிச் சென்றுவிட்டார். பாலியல் விவகாரத்தில் பல முக்கிய பிரமுகர்களின் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதைதொடர்ந்து இந்த வழக்கை டிஜிபி திரிபாதி சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார். அந்த உத்தரவை தொடர்ந்து சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர் சிவசங்கர் பாபா மீதான போக்சோ வழக்கின் விசாரணை அதிகாரிகளாக சிபிசிஐடி டிஎஸ்பி குணவர்மன், இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் ஆகியோர் நியமித்து உத்தரவிட்டார். அந்த உத்தரவை தொடர்ந்து சிபிசிஐடி டிஎஸ்பி குணவர்மன் மற்றும் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் ஆகியோர்  நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில் வடமாநில விஐபிக்களின் உதவியுடன் நேபாளம்  உள்ளிட்ட வெளிநாடு செல்வதை தடுக்க, அனைத்து விமான நிலையங்களுக்கும் சிபிசிஐடி போலீசார் தேடப்பபடும் குற்றவாளியாக அறிவித்து ‘லுக் அவுட்’  நோட்டீஸ் அனுப்பிவைத்தனர். இதை அறிந்த விசாரணை அதிகாரிகளான டிஎஸ்பி குணவர்மன், இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் மற்றும் உதவி ஆய்வாளர் ஸ்டீபன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் விமானம் மூலம் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் சென்று  அங்குள்ள போலீசார் உதவியுடன் முகாமிட்டுள்ளனர். அவர் மருத்துவமனையில் இந்து டிஸ்சார்ஜ் ஆனவுடன் கைது செய்ய போலீசார் திட்டமிட்டனர். இதற்கிடையே, சிபிசிஐடி போலீசாரின் நடவடிக்கையை அறிந்த சிவசங்கர் பாபா மருத்துவமனையில்  இருந்து திடீரென தப்பி ஓடிவிட்டார்.

அவர், ஹரித்துவார், ரிஷிகேஷ் பகுதிகளில் உள்ள மடங்களில் பாஜ முக்கிய புள்ளிகளின் ஆதரவுடன் பதுங்கி  இருப்பதாகவும், தனது நடவடிக்கைகளை போலீசார் கண்டுபிடிக்க முடியாத வகையில் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து வைத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.  இருப்பினும், சிபிசிஐடி போலீசார் அவரை கைது செய்ய தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சுஷில் ஹரி இண்டர்நேஷ்னல் பள்ளி நிறுவனம் சிவசங்கர் பாபாவுக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய ஆசிரியைகளாக பாரதி மற்றும் தீபா ஆகியோர் இருந்துள்ளனர். இவர்கள் நினைக்கும் நேரத்தில் பாபாவை  சந்திக்கும் அனுமதி பெற்று இருந்தனர்.

இவர்கள்தான், 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாணவிகளை சிவசங்கர் பாபாவின் ஆசிர்வாதம் கிடைப்பது பெரிய விஷயம் என்று கூறி அந்தரங்க அறைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதற்காக இவர்களுக்கு பள்ளி வளாகத்தில் வானளவிய அதிகாரம், அதிக சம்பளம் என்ற பாபா  வாரி இறைத்துள்ளார் என்ற தகவல் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவிகள் போலவே சிவசங்கர் பாபாவை பார்க்க வரும் தொழிலதிபர்கள் மனைவிகள்  மற்றும் மகள்கள் பலருக்கு சிவசங்கர் பாபா ‘தீர்த்தம்’ என்று மதுபானம்  கொடுத்து இரவு முழுவதும் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். சிவசங்கர் பாபா பாலியல் அனைத்துக்கும் ஆசிரியைகளான பாரதி மற்றும் தீபா உடந்தையாக இருந்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. அதைதொடர்ந்து சுசில் ஹரி இண்டர்நேஷ்னல் பள்ளி ஆசிரியைகளாக பாரதி மற்றும் தீபா மீது போக்சோ உள்ளிட்ட 9 பிரிவுகளின்  கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்த இரண்டு ஆசிரியைகளும் கைது செய்யப்படுவார்கள் என்று  சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

* வடமாநில சாமியார்கள் உதவி
போலீசார் சிவசங்கர் பாபா மீது போக்சோ பிரிவுகளின் படி வழக்கு பதிவு செய்த தகவலை அறிந்தார். இதனால், இரவோடு இரவாக சென்னையில் இருந்து உத்தரகாண்ட் மாநிலத்துக்கு தப்பிச் சென்றார். எனினும் தன்னை போலீசார் கைது செய்வதை தடுக்க டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நெஞ்சுவலி என்ற பெயரில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் உயிர் போகும் அளவுக்கு பிரச்னை இல்லை என்றே கூறுகின்றனர். எனவே கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க டேராடூன் தனியார் மருத்துவமனையில் இருந்து அப்படியே வெளிநாடு தப்பி செல்ல  சிவசங்கர் பாபா முடிவு செய்ததாகவும், அதற்காக உதவிகளை வடமாநில சாமியார்கள் மூலம் நடவடிக்கை எடுத்ததாக சிபிசிஐடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைதொடர்ந்து சிவசங்கர் பாபா வெளிநாடு தப்பி செல்ல முயற்சி செய்தது தோல்வியில் முடிந்தது.

* சம்பள உயர்வுக்காக மாணவிகளை ‘காவு’ கொடுத்த ஆசிரியைகள்
பள்ளியில் படிக்கும் 10 மற்றும் 11, 12ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் பொது தேர்வுக்கு முன்பு, பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவிடம் ஆசிர்வாதம் பெற்றால், தேர்வில் அதிக மதிப்பெண் கிடைக்கும் ஆசிரியைகள் சிலர் கூறினர். இவர்கள்தான் சிவசங்கரின் எல்லா குற்றச்செயலிலும் உடந்தையாக இருந்தனர். இதனால் இவர்களுக்கு பள்ளியில் செல்வாக்கு மற்றும் அதிக சம்பளம் கிடைத்து ஆடம்பரத்துடன் பள்ளியில் உலா வந்தனர். நல்ல மதிப்பெண் கிடைக்கும் என்று சென்ற மாணவிகளை, சிவசங்கர் பாபா ஆசிர்வாதம் என்ற பெயரில் தலையை வருடி ஆசிர்வாதம் செய்வதுபோல, சில அருவெருக்கத்தக்க செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதை வெளியில் சொல்ல முடியாத மாணவிகள் மனதில் புழுக்கத்துடனே மனதிற்குள் அழுதபடி வெளியே வந்தனர். அந்த வகையில், 15 ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் சிவசங்கர் தன் பாலியல் விளையாட்டுகளை காட்டி உள்ளார்.

* பெண் ஆசிரியைகளை பாலியல் புரோக்கராக மாற்றிய பாபா
மாணவிகளின் புகார்களின் படி சிபிசிஐடி போலீசாரின் தனிப்படை ஒன்று சுசில் ஹரி இண்டர்நேஷ்னல் பள்ளி மாணவிகள், முன்னாள் மாணவிகள், முன்னாள் ஆசிரியைகளிடம் ரகசிய விசாரணை  நடத்தினர். அது குறித்து போலீசார் கூறுகையில், பாபாவை ஆசிர்வாதம் பெற்ற முன்னாள் மாணவிகள் பலர் வெளிநாடுகளில் நல்ல வேலையில் இருக்கிறார்கள். எனவே பாபா அருள் உங்கள் மீது விழ நீங்கள் முன்ஜென்மத்தில் புண்ணியம் செய்து இருக்க வேண்டும் என்று பெண் ஆசிரியைகள் கூறுவார்கள். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் சிவசங்கர் பாபா பக்தர்களுக்கு அருள் தருவார்.

அப்போது பக்தர்களுடன் பள்ளியில் படிக்கும் மாணவிகள் பாபா பார்வை படும் வகையில் இந்த இரண்டு ஆசிரியைகளும் முன் வரிசையில் உட்கார வைப்பார்கள். அதில் பாபா யாரை கண் காட்டுகிறாரோ, அந்த மாணவிக்கு சாக்லெட் வழங்கப்படும். பாபாவுக்கு பாலாபிஷேகம் முடிந்ததும், சாக்லெட் வாங்கிய மாணவியிடம் ஆசிரியைகள் 2 பேரும் பாபாவின் அருள் உனக்கு கிடைத்துள்ளது. இதுவரை எங்களுக்கும் கூட பாபாவின் அருள் கிடைத்தது இல்லை. எனவே பாபா சொல்லும்படி நீ நடந்து கொள் என்று கூறி ஆசிரமத்தின் ரகசிய அந்தரங்க அறைக்கு அழைத்து செல்வார்கள்.

அங்கு நட்சத்திர ஓட்டலுக்கு இணையாக வடிவமைக்கப்பட்டுள்ள அறையில் உள்ள சிவசங்கர் பாபாவிடம் விட்டுவிட்டு அறையின் கதவை சாத்திவிட்டு வந்துவிடுவார்கள். பிறகு அதிகாலையில் மற்ற பள்ளி மாணவிகளுக்கு தெரியாமல்  பாபாவின் அறையில் இருந்து அந்த மாணவியை அழைத்து வந்து ‘பாபா உன்னை தொட்டதால் நீ மோச்சம் அடைந்துவிட்டாய்’ இனி நீ தான் பள்ளியின் சிறந்த மாணவி என்று கூறி இதை யாருக்கும் சொல்ல கூடாது என்று உறுதி மொழி வாங்கி கொண்டு  மாணவியை அனுப்பிவிடுவார்கள். இதுபோல் ஒவ்வொரு வாரமும் 2 ஆசிரியைகள் பள்ளி  மாணவிகளை சிவசங்கர் பாபாவிடம் அழைத்து சென்று சீரழித்துள்ளனர்.

Tags : Sivashankar Baba ,Dehradun ,CPCIT , Sivashankar Baba secretly escapes from Dehradun hospital in case of teachers who took students to a secret room: ambush in monastery with support of key points; Intensity of CPCIT personal arrest operation
× RELATED நைனிடாலில் பயங்கர காட்டு தீ