×

நடிகை ஜெயசித்ரா மகன் மீதான ரூ.2 கோடி பண மோசடி வழக்கு ரத்து: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நடிகை ஜெயசித்ரா மகனும், இசையமைப்பாளருமான அம்ரிஷ் மீதான பண மோசடி வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகை ஜெயசித்ராவின் மகனும், இசையமைப்பாளருமான அம்ரீஷ், அரிய வகை இரிடியம் என்ற பொருளை தருவதாகவும், வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் அது விலை போகும் என்றும் கூறி, 2 கோடியே 20 லட்ச ரூபாயை பெற்று, போலி இரிடியத்தைக் கொடுத்து மோசடி செய்து விட்டதாக, சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் நெடுமாறன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ள நிலையில், வழக்கை ரத்து செய்யக் கோரி அம்ரீஷ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், இசையமைப்பு சார்ந்த பணிகளுக்காக நெடுமாறனிடம் வாங்கிய 2 கோடியே 20 லட்சத்தில், ஏற்கனவே கொடுத்த தொகை போக மீதமுள்ள 62 லட்சத்திற்கான வரைவோலை புகார்தாரரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை ஏற்று புகாரை நெடுமாறன் திரும்பப் பெற்றுள்ளதால் வழக்கை ரத்து செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், அம்ரிஷ் தரப்பு விளக்கத்தை ஏற்று அவர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Tags : Jayachitra , Rs 2 crore money laundering case against actress Jayachitra's son quashed
× RELATED இரிடியம் விற்பனை செய்வதாகக் கூறி ரூ.26 கோடி மோசடி: நடிகை ஜெயசித்ரா மகன் கைது