×

காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் இயங்கிய சீதா கிங்ஸ்டன் பள்ளியை இந்து அறநிலைய துறை ஏற்றது: அமைச்சர் சேகர்பாபு மாணவிகளை சந்தித்து வாழ்த்து

சென்னை: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சென்னை கீழ்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 141 கிரவுண்ட் நிலம் சொந்தமாக உள்ளது. இதில் கதவு எண் 768ல் 44.5 கிரவுண்ட் பரப்பில் சீதா கிங்ஸ்டன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி இயங்கியது. அதில் 2010ம் ஆண்டு 12.5 கிரவுண்ட் இடம் கோயில் வசம் சுவாதீனம் ஒப்படைக்கப்பட்டது. 99 ஆண்டு குத்தகை காலம் முடிவுற்ற பின் இணை ஆணையர் நீதிமன்றத்தில் சட்டப்பிரிவு 78ன் கீழ் சுவாதீன உத்தரவு பெறப்பட்டு, பின்னர் உயர்நீதிமன்றத்தில் கலவலக் கண்ணன் செட்டி சாரிட்டீஸ் மூலம் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் கோயிலுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.

அதன் அடிப்படையில், 13.06.2021 அன்று காஞ்சிபுரம்  ஏகாம்பரநாதர் கோயில் செயல் அலுவலரிடம், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் கலவலக் கண்ணன் செட்டி சாரிட்டீஸ் நிர்வாக அறங்காவலரால் 32 கிரவுண்ட் இடம் மற்றும் பள்ளி கட்டிடங்களுடன் சுவாதீனம் ஒப்படைக்கப்பட்டு கோயில் வசம் முழுமையாக சுவாதீனம் பெறப்பட்டது. இந்த நிலத்தில் இதுவரை நடத்தப்பட்டு வந்த சீதா கிங்ஸ்டன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வந்தனர். இந்த விவரம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு அமைச்சர் சேகர்பாபு எடுத்துச் சென்றார். இதையடுத்து முதல்வர், இதுவரை பயின்று வந்த மாணவர்களின் வருங்காலத்தை கருத்தில் கொண்டு, இப்பள்ளியை அறநிலையத்துறை ஏற்று நடத்த உத்தரவிட்டார்.

இதைதொடர்ந்து, ஆணையர் அலுவலகத்தில், நேற்று அமைச்சர் சேகர்பாபு தலைமையில் பள்ளிக் கல்வி துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அந்த இடத்தில் இதுவரை நடத்தப்பட்டு வந்த சீதா கிங்ஸ்டன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியை, இந்து சமய அறநிலையத்துறை ஏற்று திருக்கோயில் நிர்வாகம் மூலமாக நடத்த முடிவு செய்யப்பட்டது. அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறும்போது, பணியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் தொடர்ந்து பணி புரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதனால் அப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள், அவர்களது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அச்சப்பட தேவையில்லை. இதுவரை மாணவர்கள் எவ்வளவு கட்டணம் கட்டினார்களோ அதே கட்டணமே இந்த ஆண்டும் வசூலிக்கப்படும். ஆசிரியர்கள், ஆசிரியைகளுக்கு, அவர்கள் ஏற்கனவே வாங்கிய சம்பளம் வழங்கப்படும். கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்டு மீட்கப்பட்ட பள்ளியை தொடர்ந்து நடத்த அரசு உத்தரவிட்டது இதுதான் முதல்முறை. இதற்காக இன்று மாணவ, மாணவிகள்அரசுக்கு நன்றி தெரிவித்தனர் என்றார்.

Tags : Department of Hindu Charities ,Sita Kingston School ,Kanchi Ekambaranathar Temple ,Minister ,Sekarbabu , Sita Kingston School, a site owned by Kanchi Ekambaranathar Temple, has been approved by the Department of Hindu Charities: Minister Sekarbabu meets and congratulates students
× RELATED மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் மகா...