×

தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் அமலாகிறது: அமைச்சர் நேரு தகவல்

திருச்சி: தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்த ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் நேரு கூறினார். திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்ட தலைமை நீரேற்று நிலையத்தை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மறைந்த முதல்வர் கருணாநிதியால் ராமநாதபுரம் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக போதிய பராமரிப்பு இல்லாததால் 100 எம்எல்டி தண்ணீர் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 75 எம்எல்டி மட்டுமே விநியோகிக்கப்படுகிறது. ராமநாதபுரம் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தால் பயன்பெறும் மாவட்டங்களில் என்னனென்ன பிரச்னைகள் உள்ளது என்பதை அந்தந்த மாவட்ட அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து ஆய்வு மேற்கொள்வோம். அந்த பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இத்திட்டத்தின் வாயிலாக 16 லட்சம் மக்கள் பயன்பெறுகிறார்கள். அதை 20 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இந்த திட்டத்தால் ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும். அதேபோல் ராமநாதபுரம் மற்றும் சுற்றியுள்ள கடலோர மாவட்டங்களில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டமும் செயல்படுத்த ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Tamil Nadu ,Minister Nehru , Tamil Nadu, Coastal Districts, Minister Nehru, Information
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...