உத்தராகண்ட் கும்பமேளாவில் 1 லட்சம் போலி கொரோனா பரிசோதனைகள்!: பெயர், முகவரி என அனைத்துமே போலி..அதிர்ச்சி தகவல் வெளியீடு..!!

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் நடைபெற்ற கும்பமேளாவின் போது மேற்கொள்ளப்பட்ட 4 லட்சம் கொரோனா பரிசோதனைகளில் 1 லட்சம் பரிசோதனைகள் போலியானது என்பது அம்பலமாகியுள்ளது. உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவார், டேராடூன், தெக்ரி உள்ளிட்ட பகுதிகளில் ஏப்ரல் மாதம் கும்பமேளா திருவிழா நடைபெற்றது. 

நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை தீவிரமடைந்த நிலையில் இந்த விழாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்று கங்கையில் நீராடியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் கும்பமேளா கொரோனா பரிசோதனை மையங்களில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து உத்தராகண்ட் மாநில சுகாதாரத்துறை ஆய்வு மேற்கொண்டு 1,600 பக்க அறிக்கையையும் தாக்கல் செய்துள்ளது. 

முறைகேடுகள் நடைபெற்ற விதம் பற்றி அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஒரே ஒரு தொலைபேசி எண்ணை கொண்டு 50க்கும் மேற்பட்டோரின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரே ஒருவருக்கு பயன்படுத்தக்கூடிய கொரோனா பரிசோதனை கருவி 700 பேருக்கு பயன்படுத்தப்பட்டதாக கணக்கு காட்டி முறைகேடு செய்ததும் அம்பலமாகி உள்ளது. பெயர்கள், முகவரிகள் எல்லாம் கற்பனையாகவே எழுதப்பட்டிருக்கின்றன. 

எந்த விவரமும் இல்லாமல் கதவு எண் 56 அலிகார் என்றும் கதவு எண் 76 மும்பை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. கதவு எண் 5 ஹரித்துவார் என்ற போலி முகவரியில் மட்டும் 530 பேர் வசிப்பதாக பதிவு செய்யப்பட்டு அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ததாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. பரிசோதனை செய்ததாக கணக்கு காட்டப்பட்ட போலி நபர்களுக்கு தொலைபேசி எண்களும் போலியாகவே எழுதி தள்ளப்பட்டுள்ளன. 

கான்பூர், மும்பை, அகமதாபாத் உள்ளிட்ட 18 நகரங்களை சேர்ந்த பல நபர்களுக்கு ஒரே தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா ஆய்வு மேற்கொண்ட பரிசோதனை மையங்களும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. பரிசோதனை மாதிரி எடுப்பவர்கள் கூட நேரடியாக மையங்களுக்கு செல்லவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது. 

ஹரித்துவாரில் மாதிரி எடுப்பதற்காக நியமிக்கப்பட்டவர்களில் 200 பேர் மாணவர்கள் மற்றும் தகவல் பதிவு ஊழியர்கள் என்றும் இவர்கள் அனைவரும் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. மாதிரி எடுப்பவர்கள் நேரடியாக மையத்தில் இருக்க வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ள அதிகாரிகள், 200 பேரில் ஒருவர் கூட ஹரித்துவாருக்கு வரவில்லை என்ற அதிர்ச்சி தகவலையும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். 

மாதிரி எடுப்போர் பட்டியலில் இருந்த பணியாளர்களை தொடர்புகொண்ட போது சுமார் 50 விழுக்காட்டினர் ராஜஸ்தானில் வசிப்பது தெரியவந்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். கொரோனா 2ம் அலையில் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டதற்கு பாதுகாப்பு விதிமுறைகளை மீறி நடைபெற்ற கும்பமேளா காரணம் என்று கூறப்பட்ட நிலையில், கும்பமேளாவில் போலி கொரோனா பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கப்பட்ட தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணமானவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.  

Related Stories: