அடுத்த ஆண்டு தேர்தலில் ஆம்ஆத்மி போட்டி குஜராத்தில் பாஜவை எதிர்க்கும் கெஜ்ரிவால்

புதுடெல்லி: குஜராத்தில் அடுத்த ஆண்டு நடக்கும் சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து தொகுதியிலும் ஆம் ஆத்மி போட்டியிடும் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ஆசிரம சாலையில் மாநில ஆம்ஆத்மி கட்சியின் புதிய அலுவலகத்தை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘‘ஒரு காலத்தில் தலைநகர் டெல்லியை ஆக்கிரமித்து இருந்தது போன்று தற்போது குஜராத் மாநிலத்தையும் இரண்டு கட்சிகள் தங்கள் வசமாக வைத்துக்கொண்டு மாறி மாறி ஆட்சி செய்து வருகிறது. கடந்த 27 ஆண்டாக இங்கு பாஜ ஆட்சி செய்கிறது. எதிர்க்கட்சியான காங்கிரசோ பாஜவின் சட்டைப் பையில் உள்ளது. எனவே, இங்கு பாஜ மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு சிறந்த மாற்றாக ஆம் ஆத்மி இருக்கும்.

அடுத்த ஆண்டு நடக்க உள்ள குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவோம். கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு டெல்லி மக்களுக்கு என்னை யாரென்றே தெரியாது. ஆனால், தேர்தலில் மக்கள் அந்த நிலைமையை மாற்றி அமைத்தார்கள். அதுதான் தற்போது தொடர்ந்து நீடித்து வருகிறது. அதேப்போன்று குஜராத் மாநிலத்தில் இருக்கும் ஆறு கோடி மக்களும் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் அவர்களுக்கான முகத்தை தேர்வு செய்வார்கள். குஜராத்தில் மாற்றத்திற்கான நேரம் வந்து விட்டது’’ என்றார். சமீபத்தில் 120 உறுப்பினர்களைக் கொண்ட சூரத் மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 27 இடங்களை வென்று காங்கிரஸ் கட்சிக்கு இணையான இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>