கோபா அமெரிக்கா கால்பந்து பிரேசில், கொலம்பியா அணிகள் வெற்றி

பிரேசிலியா: தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான கோபா அமெரிக்கா கோப்பை கால்பந்து தொடரின் தொடக்க லீக் ஆட்டங்களில்  பிரேசில், கொலம்பியா அணிகள் வெற்றி பெற்றுள்ளன. பிரேசில் தலைநகர்  பிரேசிலியாவில்  ‘கோபா கோப்பை’ கால்பந்து தொடர் நேற்று தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில், பி பிரிவுஅணிகளான  நடப்பு சாம்பியன் பிரேசில் - வெனிசுலா மோதின. நட்சத்திர ஆட்டக்காரர் ஜூனியர் நெய்மர் தலைமையிலான   பிரேசில் அணி துடிப்புடன் விளையாடி எதிரணி கோல் பகுதியை முற்றுகையிட்ட வண்ணம் இருந்தது.  அதனால் வெனிசுலா வீரர்கள் நெய்மரை சமாளிக்கவே நேரத்தை செலவிட்டனர்.

பிரேசில் வீரர்  மர்ச்விநொஸ்  23வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார். 64வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை நெய்மர் அழகான கோலாக மாற்றினார்.  ஆட்டம் முடிய இருந்த 89வது நிமிடத்தில் பிரேசிலின் கேப்ரியல் பார்போசா  தன் பங்குக்கு ஒரு  கோல் அடித்தார். இறுதியில் பிரேசில் 3-0 என்ற கோல்  கணக்கில் அபாரமாக வென்று கணக்கை தொடங்கியது.

குய்யாபா நகரில்  நேற்று நடந்த  ஏ பிரிவு லீக்  ஆட்டத்தில்  கொலம்பியா - ஈக்வடார்  அணிகள் விளையாடின. இரு அணிகளும் சமபலத்தில் மோதின.   எட்வின் கார்டோனா 42வது நிமிடத்தில் அடித்த ஒரே ஒரு கோல்  கொலம்பியாவுக்கு 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்த உதவியது.  கொரோனாவால் வாய்ப்பு இல்லை: தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான முக்கிய போட்டி என்றாலும், இதில் 1993ஆம் ஆண்டு முதல் ஒரு வெளிநாட்டு அணியும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டு வந்தது. இப்படி ஜப்பான், அமெரிக்கா, கத்தார், மெக்சிகோ என பல நாடுகள் வாய்ப்பு பெற்றன. ஆனால் எந்த அணியும்  காலியிறுதியை தாண்டியதில்லை. கடந்த ஆண்டு கொரோனா பீதி காரணமாக கோபா கோப்பை ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு போட்டி நடந்தாலும்... தொற்று பரவல் குறையாதது, யூரோ கோப்பை, உலக கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டிகள் நடப்பது போன்ற காரணங்களால் வெளிநாட்டு அணி எதுவும் பங்கேற்கவில்லை.

Related Stories:

>