யூரோ கோப்பை கால்பந்து: உக்ரைனை நொறுக்கியது நெதர்லாந்து

ஆம்ஸ்டெர்டாம்: யூரோ கோப்பை கால்பந்து தொடரின் லீக் சுற்றில்  நெதர்லாந்து 3-2 என்ற கோல்கணக்கில்  உக்ரைனை நொறுக்கி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. ஆம்ஸ்டெர்டாமில் நேற்று நடந்த சி பிரிவு லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து - உக்ரைன் அணிகள் மோதின. நெதர்லாந்து தொடக்கத்தில் இருந்தே தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டாலும், உக்ரைனின் தடுப்பு அரணை தகர்க்க முடியாமல் திணறியது. இதனால் முதல் பாதியில் இரு அணிகளுமே கோல் ஏதும் போடாமல் சமநிலை வகித்தன.2வது பாதியில்  நெதர்லாந்து வீரர்கள்  கியோர்ஜினேயோ வைனால்டம் 52வது  நிமிடத்திலும்,   வெலர் வெக்ஹோர்ஸ்ட்  58வது நிமிடத்திலும் அடுத்தடுத்து  கோல் அடித்து  அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தனர்.  தட்டுதடுமாறி ஆடிக்கொண்டிருந்த உக்ரைன் வீரர்களும் புதிய எழுச்சியுடன் பதில் தாக்குதலை தீவிரப்படுத்த ஆட்டத்தில் அனல் பறந்தது.

அந்த அணியின்  ஆண்டிரி யாரேமொலங்கோ 75வது  நிமிடத்திலும்,  ரோமன் யாரெம்சுக் 79வது நிமிடத்திலும் கோல் அடித்ததால் ஆட்டம் மீண்டும் சமநிலைக்கு வந்தது.  கடைசி கட்டத்தில் நெதர்லாந்து வீரர்கள் காட்டிய வேகத்தின் பலனாக அந்த அணியின் டென்செல் டும்பிரைஸ்  85வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து மீண்டும் முன்னிலை பெற்று தந்தார். விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் நெதர்லாந்து 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது. முன்னதாக நடந்த மற்றொரு சி பிரிவு ஆட்டத்தில்  ஆஸ்திரியா 3-1 என்ற கோல் கணக்கில் வடக்கு மேசிடோனியாவை வீழ்த்தியது.  டி பிரிவில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில்  குரோஷியாவை வென்றது.

Related Stories:

>