தலைவர்கள், பெண் பத்திரிகையாளரை தரக்குறைவாக விமர்சித்த மிரட்டல் ஆசாமி கிஷோர் கே சாமி அதிரடி கைது: செங்கல்பட்டு சிறையில் அடைப்பு

சென்னை: சமூக வலைதளங்களான யூடியூப், டிவிட்டர் ஆகியவற்றில் தமிழக முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர்கள் கலைஞர் கருணாநிதி மற்றும் அண்ணா குறித்து தொடர்ந்து அவதூறு பரப்பியதுடன் பெண் பத்திரிகையாளர்களை ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் பேசியும் மிரட்டியும் வந்த கிஷோர் கே.சாமியை போலீசார் கைது செய்தனர்.   பேஸ்புக், டிவிட்டர், யூடியூப் உள்ளிட்ட  சமூக வலைதளங்களில் மூத்த தலைவர்கள் குறித்து எந்தவித ஆதாரமும் இல்லாமல் உள்நோக்கத்துடன் விமர்ச்சிப்பது அதிகரித்து வருகிறது. கேகே நகர், பி.டி. ராஜன் சாலை, கலிங்கா காலனியில் வசித்து வருபவர் கிஷோர் கே.சாமி (41). இவர், ‘இடம் வலம்’ என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அதில் மூத்த தலைவர்களான அண்ணா, டாக்டர் கலைஞர், தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறித்து எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அவதூறான கருத்துக்களை பரப்பி வருகிறார்.

மேலும் பெண் பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசுவது அவதூறாக விமர்சிப்பது மிரட்டுவது போன்ற இழிவானசெயல்களில் ஈடுபட்டு வந்தார். கடந்த அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாளரைப்போல் தன்னைக் காட்டிக்கொண்டு பல தலைவர்களை கடுமையாக விமர்சித்து வந்துள்ளார்.திமுகவை குறிவைத்து தேவையற்ற அவதூறான கருத்துக்களை சமூக வலை தளங்களில் பதிவிட்டு வந்தார். இதுகுறித்து, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக தொழில்நுட்ப பிரிவின் ஒருங்கிணைப்பாளர் பம்மலை சேர்ந்த ரவிச்சந்திரன் கடந்த 10ம் தேதி சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.   இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று அதிகாலை, கேகே நகர் வீட்டில் இருந்த கிஷோர் கே.சாமியை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அவர் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், கலகத்தை விளைவிக்கும் நோக்கத்தில் செயல்படுதல், சில சமூகத்திற்கு எதிராக குற்றம் செய்யத் தூண்டுதல் ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை வரும் 28ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அவரை சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்க போலீசார் அழைத்துவந்தனர். ஆனால் அங்கு இடம் இல்லாததால் செங்கல்பட்டு கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், பல்வேறு அவதூறுகள், தரக்குறைவான விமர்சனம் செய்ததாக பத்திரிகையாளர்கள் கவிதா முரளிதரன், மனோஜ் பிரபாகர், கார்த்திகை செல்வன் மற்றும் பெண் பத்திகையாளர்கள் சங்கம் உள்பட 10க்கும் மேற்பட்ட புகார்கள் கிஷோர் கே சாமி மீது உள்ளது. எனவே, இவர் மீது மேலும் பல வழக்குகள் பாயும் என தெரிகிறது.

Related Stories: