×

திருநங்கைகள் நல வாரியத்தில் விண்ணப்பித்தவர்களுக்கும் கொரோனா நிவாரணம் : அரசு பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராவதற்காக பதிவு செய்ய விண்ணப்பித்தவர்களுக்கும் கொரோனா நிவாரண உதவி வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.    கொரோனா பேரிடர் காலத்தில் அரிசி அட்டைதாரர்களுக்கு நிவாரண உதவியாக 4 ஆயிரம் ரூபாய் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி முதல் தவணையாக ₹2000 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ரேஷன் அட்டைகளோ, அடையாள அட்டைகளோ இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் உதவித்தொகை வழங்க உத்தரவிட  கோரி தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்றாம் பாலினத்தவரான கிரேஸ்பானு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, குடும்ப அட்டை வைத்திருக்கும் 2 ஆயிரத்து 596 மூன்றாம் பாலினத்தவர்  உள்ளிட்ட அரிசி அட்டைதாரர்களுக்கு அரசின் 4 ஆயிரம் ரூபாய் நிதியுதவியின் முதல் தவணை வழங்கப்பட்டுள்ளது என்றும் குடும்ப அட்டை இல்லாத 8 ஆயிரத்து 493 மூன்றாம் பாலினத்தவருக்காக திருநங்கைகள் நல வாரியம் மூலமாக வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல் ஜெய்னா கோத்தாரி ஆஜராகி, கடந்த ஒரு ஆண்டாக திருநங்கைகள் நல வாரியம் செயல்படவில்லை. வாரியத்தில் விண்ணப்பிக்கப்பட்ட பல விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.  எனவே, வாரியத்திற்கு விண்ணப்பித்தவர்கள் அதற்கான ஆதாரங்களை காட்டினால் அதை அரசு பலிசீலிக்குமாறு கோரினார்.அப்போது, அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, மனுதாரரின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றார்.  இதையடுத்து, நீதிபதிகள், திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராவதற்காக பதிவு செய்வதற்கு மே 31ம் தேதிவரை விண்ணப்பித்தவர்களை மாநில அரசு அறிவித்துள்ள நிவாரண உதவிக்கு பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை 18ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.



Tags : Corona relief for transgender welfare board applicants: iCourt orders government to consider
× RELATED பங்குனி திருவிழாவை முன்னிட்டு...