ஹைட்ரோ கார்பன் ஏல அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்: ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு

சென்னை: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியதற்கு ஓ.பன்னீர்செல்வம் வரவேற்றுள்ளார்.இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: காவிரி வடிநிலை பகுதியில் அமைந்துள்ள வடத்தெரு பகுதியில் புதிதாக ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்பினை மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் கடந்த 10ம் தேதி வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு தமிழ்நாடு பாதுகாப்பு வேளாண் மண்டல மேம்படுத்துதல் சட்டத்திற்கு எதிரானது. மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர், பிரதமருக்கு கடந்த 13ம் தேதி கடிதம் எழுதியுள்ளார். இதை அதிமுக வரவேற்கிறது.

 தமிழக முதல்வர் வருகின்ற 17ம் தேதி பிரதமரை நேரில் சந்திக்கும்போது விவசாயிகள் நலன் காக்கும் வகையில், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றங்கள் துறை அமைச்சரின் கடிதம் குறித்தும், சட்டப்படி தமிழக அரசிற்கு உள்ள அதிகாரம் குறித்தும் விரிவாக எடுத்துரைத்து, புதிதாக புதுக்கோட்டை மாவட்டம் வடத்தெரு பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிக்கையை உடனடியாக ரத்த செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories:

>