×

வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கங்களை தவிர மற்ற விலங்குகளுக்கு கொரோனா தொற்று இல்லை!: வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் பேட்டி..!!

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கங்களை தவிர வேறு எந்த விலங்குகளுக்கும் கொரோனா கண்டறியப்படவில்லை என்று வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கடந்த 3ம் தேதி நீலா என்கிற பெண் சிங்கம் கொரோனா தொற்று காரணமாக பரிதாபமாக உயிரிழந்தது. தொடர்ந்து, 10 சிங்கங்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


இதனையடுத்து புலி உள்ளிட்ட மற்ற விலங்குகளுக்கும் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் வனத்துறை அமைச்சர் ராமசந்திரன், வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆய்வு மேற்கொண்டார். கொரோனா பாதித்த சிங்கங்கள், சிங்க உலாவிடம் மற்றும் வனவிலங்குகளின் உறைவிடங்களை அவர் பார்வையிட்டார். 


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், புலிகளுக்கு எடுக்கப்பட்ட மாதிரியில் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை என்றார். மற்ற விலங்குகளுக்கும் கொரோனா பரவியதாக தகவல் இல்லை என்று அவர் கூறினார். முதுமலை டாப்சிலிப் யானைகள் முகாம்களிலும் யானைகளுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். 


மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கு கொரோனா பரவாமல் இருக்க விலங்கு பராமரிப்பாளர்களுக்கு 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்திருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். மேலும் பராமரிப்பாளர்களுக்கு பாதுகாப்பு கவச உடை கட்டாயம் என்றும் வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் குறிப்பிட்டார்.



Tags : Vandalur Zoo ,Wildlife ,Minister ,Ramachandran , Vandalur Park, Animal, Corona, Minister Ramachandran
× RELATED வண்டலூர் உயிரியல் பூங்கா 9ம் தேதி திறந்திருக்கும்