கோபா அமெரிக்கா கால்பந்து: முதல் போட்டியில் பிரேசில் அபார வெற்றி

பிரேசிலியா: தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அணிகளுக்கான 47வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்டு பிரேசிலில் நேற்று தொடங்கியது. ஜூலை 10ம் தேதி வரை நடைபெறும் இந்த தொடர் பிரேசிலின் 4 நகரங்களில் உள்ள 5 மைதானங்களில் நடக்கிறது. இதில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஏ பிரிவில் அர்ஜென்டினா, பொலிவியா, உருகுவே, சிலி, பராகுவே, பி பிரிவில் பிரேசில், கொலம்பியா, வெனிசுலா, ஈகுவடார், பெரு ஆகிய அணிகள் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெறும்.

இந்திய நேரப்படி இன்று அதிகாலை 2.30 மணிக்கு பிரேசிலியா நகரில் நடந்த முதல் போட்டியில் பி பிரிவில் நெய்மர் தலைமையிலான பிரேசில் அணி, வெனிசுலா அணியுடன் மோதியது. இதில் தொடக்கம் முதலே பிரேசில் ஆதிக்கம் செலுத்தியது. 23வது நிமிடத்தில் பிரேசிலின் மார்கின்ஹோஸ் முதல் கோலை அடித்தார். 2வது பாதியில் ஆட்டத்தின் 64வது நிமிடத்தில் பிரேசில் கேப்டன் நெய்மர் கோல் அடித்தார். தொடர்ந்து 89வது நிமிடத்தில், கேப்ரியல் பார்போசா தனது பங்கிற்கு கோல் அடித்தார். இறுதிவரை போராடியும் வெனிசுலா அணியில் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் 3-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் வெற்றி பெற்றது.

தொடர்ந்து இன்று அதிகாலை 5.30 மணிக்கு நடந்த 2வது லீக் போட்டியில், கொலம்பியா-ஈகுவடார் அணிகள் மோதின. இதில் கொலம்பியா வீரர் எட்வின் கார்டோனா 42வது நிமிடத்தில் கோல் அடித்தார். பின்னர் கோல் எதுவும் விழாததால் இதுவே வெற்றி கோலாக அமைந்தது. முடிவில் 1-0 என கொலம்பியா வெற்றி பெற்றது. நாளை அதிகாலை 2.30 மணிக்கு ஏ பிரிவில் அர்ஜென்டினா-சிலி, அதிகாலை 5.30 மணிக்கு பராகுவே-பொலிவியா அணிகள் மோதுகின்றன.

Related Stories:

>