சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு: கொறடாவாக எஸ்.பி.வேலுமணி தேர்வு

சென்னை: எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிமுக சட்டப்பேரவை துணை தலைவர், கொறடாவை தேர்வு செய்ய எம்எல்ஏக்கள் கூட்டம் தலைமை அலுவலகத்தில் பகல் 12 மணிக்கு கூடியது. கூட்டத்தில் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவின் தலைமைக்கு ஆளுமை மிக்க நபர்கள் இல்லாததால் தள்ளாட்டமாக உள்ளது. இதனால் அதிமுக இரட்டை தலைமையின் கீழ் செயல்பட்டு வருகிறது. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் உள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது, கொங்கு மண்டலத்தை சேர்ந்த அமைச்சர்களை உடன் வைத்து கொண்டு, தன்னிச்சையாக முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.

கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓபிஎஸ்சுடன் கலந்து ஆலோசிக்காமல் அவரை ஓரம்கட்டியதாக கூறப்படுகிறது. இதனால், விரக்தியடைந்த ஓபிஎஸ், எடப்பாடியுடன் சில கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் தவிர்த்தார். இதனால் இருவருக்கும் இடையே இருந்த மோதல் வெளிச்சத்திற்கு வந்து சந்தி சிரித்தது. நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலின்போது முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை அறிவிக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வெளிப்படையாக தெரிவித்தனர். இதற்கு துணை முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தான் எப்போதும் 2வது கட்ட தலைவராகவே இருக்க முடியாது. நான்தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்.

அதனால் முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினார். ஆனால், ஓபிஎஸ்சுக்கு ஆதரவு கிடைக்கவில்லை. மூத்த தலைவர்கள் ஓபிஎஸ்சுடன் பேசி, இந்த ஒரு முறை விட்டுக் கொடுக்கும்படி சமாதானப்படுத்தினர். அதைத் தொடர்ந்து, நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டார். இதனால், விரக்தியடைந்த ஓபிஎஸ் விறுவிறுவென நடையை கட்டினார். அன்று மாலை வீட்டிற்கு சென்று ஓபிஎஸ்சை எடப்பாடி சமாதானப்படுத்தினார்.  இருப்பினும், தனக்கு முதல்வர் வேட்பாளர் பதவி கொடுக்காததால், தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்யாமல் தனது தொகுதியிலேயே ஓபிஎஸ் முடங்கினார்.  

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததை தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பிடிக்க அதிமுகவில் கடும் போட்டி ஏற்பட்டது. எடப்பாடி பழனிச்சாமியும் அவரது ஆதரவாளர்களும் அந்தப் பதவியை கைப்பற்றத் துடித்தனர். இரு தலைவர்களும் கடுமையாக மோத ஆரம்பித்ததால், எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஓட்டெடுப்பு நடத்தி தலைவரை முடிவு செய்யலாம் என்று முடிவு எடுத்தபோதுதான் ஓ.பன்னீர்செல்வம் பணிந்தார். இதனால் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதிமுக சட்டமன்ற கொறடாவாக எஸ்.பி.வேலுமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை கொறடாவாக சு.ரவி, பொருளாளராக கடம்பூர் ராஜு நியமனம் செய்யப்பட்டுள்ளார். செயலாளராக கே.பி.அன்பழகன், துணை செயலாளராக மனோஜ்பாண்டியன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories:

>