×

சிற்றாறு தண்ணீரை ஆற்றில் திறந்துவிடுவதால் மானூர், களக்குடி குளங்கள் நிரம்புவதில் மீண்டும் சிக்கல்?

நெல்லை :  சிற்றாறு தண்ணீரை ஆற்றுக்குள் திறந்து விடுவதால், மானூர், களக்குடி குளங்கள் நிரம்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சீசன் காலத்தில் சிற்றாறு தண்ணீர் மானூர் குளத்திற்கு வருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல்லை மாவட்டத்தில் உள்ள பெரிய குளங்களில் பிரதானமானது மானூர் குளமாகும். ஒரு அணைக்கட்டுக்கு இணையாக கருதப்படும் மானூர் குளமானது 1120 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இக்குளம் மூலம் மானூர், மதவக்குறிச்சி, மாவடி, எட்டாங்குளம் என 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 4 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மானூர் குளம் நிறைந்தால் அதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் ஓராண்டுக்கு விவசாயம் செழிக்கும்.

 பொதுவாக சீசன் காலத்திலும், மழை காலத்திலும் குற்றால அருவிகளில் இருந்து வரும் சிற்றாற்று தண்ணீர், மானூர் குளத்திற்கு 18 குளங்களை தாண்டி வரவேண்டி உள்ளது. பருவமழை காலங்களிலும், குற்றாலத்தின் சீசன் காலங்களிலும் மானூர் குளத்திற்கு தடைகளை தாண்டியே தண்ணீர் வருகிறது. சிற்றாறு கால்வாயில் வி.கே புதூர் தாயார் தோப்பு அணைக்கட்டு அருகே தண்ணீரை திறந்து ஆற்றில் விடும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன.

இதனால் கடந்த சில ஆண்டுகளாகவே மானூர், களக்குடி குளங்களுக்கு தண்ணீர் வருவதே இல்லை. வி.கே.புதூர் பகுதியில் சிற்றாறு கால்வாயில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளன. கால்வாயின் பெரும்பகுதியை ஆக்கிரமிப்பு செய்த சிலர் தென்னந்தோப்புகளை வைத்துள்ளனர். இதனால் கால்வாயின் கரைகள் மட்டப்படுத்தப்பட்டதால், கால்வாயில் தண்ணீர் அதிகமாக வரும்போது, அப்பகுதியில் உள்ள வயல்களுக்குள் புகுந்துவிடும். எனவே தோப்புகள், வயல்களை காப்பாற்ற, கால்வாய் தண்ணீரை ஆற்றுக்குள் திறந்துவிடுகின்றனர்.

 வி.கே.புதூர் ஐடி அருகே கல்லூத்து மற்றும் கழுநீர் குளத்து பாசன விவசாயிகள் தண்ணீரை ஆற்றை நோக்கி திருப்பி விடுகின்றனர். இதனால் வி.கே புதூர் தொடங்கி தொத்திகுளம் வரைக்கும் 2 கிமீ தொலைவு தண்ணீர் கால்வாயில் இருந்து வெளியேற வழி கிடைக்கிறது. அதன்பின்னர் 33 கிமீ தொலைவுக்கு தண்ணீர் குறைவாக வருவதால், மானூர், களக்குடி உள்ளிட்ட குளங்களுக்கு தண்ணீர் கிடைப்பதே பெரும்பாடாக உள்ளது. குற்றாலத்தில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக சிற்றாறு கால்வாயில் தண்ணீர் அதிகமாக வந்தது.

இதில் வி.கே.புதூரை தாண்டி காணப்படும் அருணாசலப்பேரி, அய்யனார்குளம், குறிப்பன்குளம் உள்ளிட்ட குளங்கள் கூட நிரம்பின. மானூர், களக்குடி குளங்களுக்கு தண்ணீர் வருவதற்குள் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதுகுறித்து மானூர் குளம் பாசன விவசாயிகள் சங்கத்தலைவர் முகமது இப்ராகிம் கூறுகையில் ‘‘வீ.கே.புதூர் பகுதியில் காணப்படும் 7 ஷட்டர்களில், 4 ஷட்டரை ஆற்றை பார்த்து திருப்பிவிடுகிற காரணத்தால், மானூர்குளத்திற்கு தண்ணீர் வருவதற்கு மிகவும் சிரமமாக உள்ளது.

பொதுப்பணித்துறை எங்களுக்கு தண்ணீர் வருவதற்கு உதவி செய்தாலும் அப்பகுதி வயல்காரர்கள் ஆற்றை நோக்கி தண்ணீரை திருப்புகின்றனர். சிற்றாறு கால்வாய் கரையில் வடக்கு பக்கத்தில் சாலையும் ேபாட்டுவிட்டனர். இக்கால்வாயை சீர்படுத்தி மானூர் குளத்திற்கு தண்ணீர் வருவதற்கு அண்ணா பல்கலைக்கழக முன்னாள் டீன் சக்திநாதன் எவ்வளவோ உதவிகள் செய்தார். இருப்பினும் மீண்டும் தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது’’ என்றார்.

 இவ்வாறு கோடைக்காலத்தில் பெய்த மழையால் மானூர் குளத்தில் ஓரளவுக்கு தண்ணீர் இருக்கும் நிலையில், தென்மேற்கு பருவமழைக்காலத்தில் மானூர் குளம் நிரம்புவதற்கு மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் போர்க்கால அடிப்படையில் தக்க நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா? என்பதே விவசாயிகள் உள்ளிட்ட அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

தாமிரபரணி தண்ணீர் கிடைக்குமா?

தாமிரபரணியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் காலங்களில் அந்த தண்ணீரை மானூர் குளத்திற்கு திருப்பிட பல்வேறு திட்டங்கள் இன்றுவரை காகித வடிவிலே உள்ளன. தமிழக முதல்வரின் சிறந்த திட்டமாக கருதப்படும் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ ேகாரிக்கை மனுக்கள் பெறுவதிலும், மானூர் குளத்திற்கு தாமிரபரணி தண்ணீர் கேட்டு விவசாயிகள் விண்ணப்பம் செய்தனர். அதற்கு பதில் தெரிவிக்க அரசு சார்பில் நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. ஆனால் அம்மனுவை இப்போது பொதுப்பணித்துறையினர், வேளாண்துறைக்கு அனுப்பி விளக்கம் கேட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Tags : Kalakudi , Nellai: There is a problem in filling the Manor and Kalakudi ponds due to the release of small river water into the river. Small during the season
× RELATED யானை தாக்கி விவசாயி பலி