×

திருவள்ளூர் அருகே பட்டறை பெரும்பூதூர் பகுதியில் நிறுத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை மீண்டும் தொடங்குங்கள்!: கிராமமக்கள் கோரிக்கை..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பட்டறை பெரும்பூதூர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகழ்வாராய்ச்சி பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பட்டறை பெரும்பூதூரில் கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் இருந்ததை அடுத்து முதற்கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த 2016ம் ஆண்டு தொடங்கியது. 2018ம் ஆண்டு நடைபெற்ற 2ம் கட்ட பணியின் போது 350 பழங்கால பொருட்கள் அங்கு கண்டெடுக்கப்பட்டன. அதனுடன் பழங்கால பானைகளும், பிராமிய எழுத்துக்களும் கிடைத்ததை அடுத்து அவை அங்குள்ள பூண்டி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன. 


இந்நிலையில் பழமை வாய்ந்த கோவில்கள் நிறைந்த பட்டறை பெரும்பூதூர் பகுதியில்  நிறுத்தி வைக்கப்பட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளமாக திகழும் பழங்கால கிணறு உள்ளிட்ட சான்றுகள் உள்ளதாக கூறிய அவர்கள், வரலாற்று பெருமைகளை மீட்டெடுத்து தமிழர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்களை வெளிக்கொணர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். 


இதனிடையே மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி சத்திரம் கிராமத்தில், சிதிலமடைந்துள்ள 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவிலை சீரமைக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாண்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயிலில் உள்ள பழமைவாய்ந்த ஐம்பொன் சிலை உட்பட 50க்கும் மேற்பட்ட விலைமதிப்பில்லா சிலைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். 



Tags : Perumbudur ,Tiruvallur , திருவள்ளூர்,அகழ்வாராய்ச்சி,பணி,கிராமமக்கள்
× RELATED பெரும்புதூர் நாடாளுன்ற தொகுதியில்...