×

கடும் கட்டுப்பாடுகளுடன் 35 நாட்களுக்கு பின்னர் டாஸ்மாக் கடைகள் இன்று திறப்பு

திருச்சி : திருச்சியில் 35 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்படுகிறது. மேலும் மது விற்பனை செய்ய கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோ னா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.. அதன்படி தொற்று குறைந்து வரும் 27 மாவட்டங்களில் நேரக்கட்டுப்பாடுடன் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளன.

திருச்சி மாவட்டத்தில் 185 டாஸ்மாக் கடைகள் உள்ளன. ஆனால் பெரும்பாலான கடைகளில் கையிருப்பு சரக்கு இல்லை. துவாக்குடி பெல்நகரில் உள்ள அரசு டாஸ்மாக் குடோனில் உள்ள சரக்குகள் இன்று காலை முதல் கடைகளுக்கு வழங்கப்பட உள்ளன. வழக்கமாக திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை ரூ.3 கோடிக்கு மதுபான விற்பனை நடக்கும். கடந்த 35 நாட்களாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்படுகிறது.

அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில், ‘அனுமதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் அனைத்து டாஸ்மாக் பணியாளர்களும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பணியில் இருக்க வேண்டும். பணியாளர்கள் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். கடை பணியாளர்களில் உடல் தகுதி வாய்ந்த 55 வயதுக்கு கீழ் உள்ள அனைத்து பணியாளர்களும் பணியில் இருக்கலாம். கடையின் முன்புறம் மதுபானம் வாங்க வருபவர்களின் கூட்டத்தை 2 பணியாளர்கள் வெளியிலிருந்து ஒழுங்குபடுத்த வேண்டும். மதுபானம் வாங்க வரும் நபர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். முகக்கவசம் இல்லாமல் வருபவர்களுக்கு மதுபானம் கிடையாது.

டாஸ்மாக் கடைகள் திறக்கும் போதும், மூடும் போதும் உட்புறம், வெளிப்புறம் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். கடைகளை சுற்றிலும் ஒரு நாளைக்கு இரண்டு முறை பிளிச்சிங் பவுடர் தெளிக்க வேண்டும். மதுபானம் வாங்க வருபவர்களுக்கு இடையில் 6 அடி இடைவெளி இருக்க வேண்டும். ஒரு நேரத்தில் 5 பேருக்கு மேல் அனுமதியில்லை. குறைந்தபட்சம் 2 பணியாளர்கள் மதுபான சில்லறை விற்பனை கடையில் வெளிப்புறம் நின்று சமூக இடைவெளி, வாடிக்கையாளர் முகக்கவசம் அணிந்துள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும். மதுபானம் வாங்க வரும் நபர்குளுக்கு சானிடைசர் வழங்கிய பின்னரே கடைக்குள் அனுமதிக்க வேண்டும்.

மதுபானம் வாங்கி செல்லு்ம நபர்கள் பொது இடங்களில் அமர்ந்து மதுபானம் அருந்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மதுபானம் வாங்க வரும் நபர்களுக்கு அதிகளவில் மதுபானம் வழங்க கூடாது. மதுபான சில்லறை விற்பனைக் கடையின் விற்பனையை கட்டாயம் மாலை 5 மணிக்குள் முடிக்க வேண்டும். விற்பனையின் போது சமூக ஆர்வலர்களை பணிக்கு பயன்படுத்திக் கொள்ளவும், காவல்துறை பாதுகாப்பு பெற்றுக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என பல்வேறு கட்டுப்பாடுகளுடன் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன.
இதையொட்டி டாஸ்மாக் கடை பணியாளர்கள் டாஸ்மாக் கடைகளுக்கு முன் சமூக இடைவெளி வட்டம் வரைவது, பேரிகார்டு அமைப்பது, தடுப்பு கட்டைகள் அமைப்பது போன்ற பணிகளை நேற்று மேற்கொண்டனர்.

டாஸ்மாக் பணியாளர் லுங்கி அணிந்து பணியாற்றக் கூடாது : மாவட்ட மேலாளர் அறிவுறுத்தல்

திருச்சி மாவட்ட டாஸ்மாக் மேலாளர், அனைத்து கடை மேற்பார்வையாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிகபட்சமாக விற்பனையாகும் மதுபானக்கடைகள் கூடுதலாக தடுப்பு அரண்கள் அமைத்து வாடிக்கையாளர்கள் நெரிசலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பு வேலியினை புகைப்படம் எடுத்து அலுவலக வாட்ஸ்அப் குழுவில் பதிவிட வேண்டும்.

அதிகபட்சமாக மாநகர பகுதியில் 200 மீ. தொலைவிலும், ஊரக பகுதியில் 100 மீ. தொலைவிலும் டோக்கன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ேடாக்கன்களை மேற்பார்வையாளர்களே தயாரித்து கொள்ள வேண்டியது. கடை பணியாளர்கள் லுங்கி அணிந்து பணியாற்றக்கூடாது. அடையாள அட்டை அணிந்து பணியாற்ற வேண்டும். கூட்ட நெரிசலை தவிர்க்க ஒலி பெருக்கி பயன்படுத்த வேண்டும். வாடிக்கையாளர்கள் 6 அடி இடைவெளி 1 மீட்டர் வட்டத்துக்குள் நிற்கும் வண்ணம் குறைந்தது 50 வெள்ளை நிற பெயின்ட் கொண்டு அடையாளங்கள் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : Tasmac , Trichy: After 35 days in Trichy, Tasmag stores are opening today. And stricter restrictions on the sale of alcohol
× RELATED டாஸ்மாக் கடையை உடைக்க முயன்ற கைதான நான்கு வாலிபர்களுக்கு சிறை