பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை காங்கிரஸ் அரசுகள் ஏன் குறைக்கவில்லை? மத்திய அமைச்சர் கேள்வி

புதுடெல்லி: ‘பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை காங்கிரஸ் அரசுகள் ஏன் குறைக்கவில்லை?’ என்று மத்திய அமைச்சர் கேள்வி எழுப்பி உள்ளார். நாட்டில் கடந்த மே மாதம் 4ம் தேதி தற்போது வரை 23 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு மாநிலங்களில் இவற்றின் விலை லிட்டருக்கு ரூ.100ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள் தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் ஆலையைத் திறந்து வைத்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நிருபர்களிடம் கூறியதாவது: தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான செலவினங்களைச் சமாளிக்க பெட்ரோல், டீசல் மீதான வரியில் இருந்து மத்திய, மாநில அரசுகளுக்கு கூடுதல் பணம் தேவை.  எரிபொருள் விலை ஏற்றம் நுகர்வோரை பாதிக்கின்றன என்பது உண்மைதான். இந்த ஆண்டு மட்டும் ஏழைகளுக்கு இலவச உணவு தானியங்களை வழங்குவதற்காக அரசு ரூ.1 லட்சம் கோடியை செலவிடுகிறது, தவிர தடுப்பூசிகள் மற்றும் சுகாதார உள்கட்டமைப்புகளுக்கு செலவழிக்கிறது. எரிபொருள் விலையால் ஏழைகள் பாதிக்கப்படுவது குறித்து கவலைப்படும் ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசலுக்கு விதிக்கப்படும் வாட் வரியை ஏன் குறைக்கவில்லை? காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் (ராஜஸ்தான், பஞ்சாப்) முதலமைச்சர்களிடம் வரிகளைக் குறைக்குமாறு கூற வேண்டியது தானே? மேலும், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவிடமும் கூற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>