டாஸ்மாக் திறக்காத மாவட்டங்களுக்கு மது கடத்தினால் நடவடிக்கை: அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

சேலம்: தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று, சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: டாஸ்மாக் கடைகளை பொருத்தளவில் கடந்த மே 10ம் தேதி மூட உத்தரவிடப்பட்டது. நாளை (இன்று) முதல் கொரோனா பரவல் வெகுவாக குறைந்த 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகிறது. 11 மாவட்டங்களில் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் தொடர்ந்து மதுபான கடைகள் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. அங்கு மே 15ம் தேதி 50 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தபோதும் திறந்திருந்தார்கள். ஆனால்,தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்கவும் டாஸ்மாக் கடைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் மூடினார். தற்போது பரவல் குறைந்த மாவட்டங்களில் மட்டும் திறக்கப்படுகிறது. கடந்த ஆட்சி காலத்தில் நோய் தொற்று குறையாத போது டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து இயங்கியதால், அதனை மூட தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

ஆனால், தற்போது அத்தகைய சூழலை தமிழக அரசு வைத்திருக்கவில்லை. நோய் தொற்று பரவல் 8 சதவீதமாக குறைந்துள்ளது. கர்நாடகாவில் 21.67 சதவீதமாக இருக்கிறது. மேலும்,தமிழகத்தில் டாஸ்மாக் கடையோடு, கட்டுமான பொருட்கள் விற்பனை கடைகள், செல்போன் கடைகள் திறப்பு போன்ற தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாத 11 மாவட்டங்களுக்கு பிற மாவட்டங்களில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பக்கத்து மாநிலங்களில் இருந்து கடத்தி வருபவர்கள் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுகிறதோ அதேபோல் நடவடிக்கை  இருக்கும். இதற்காக போலீசார் தீவிர சோதனை நடத்துவார்கள். டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என பாஜ போராட்டம் நடத்துவது அரசியலுக்காகத்தான். பாஜவிற்கு பொதுமக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால், பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்துதான் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த வேண்டும். இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

Related Stories:

More
>