×

தண்டையார்பேட்டையில் அதிகாலை சரக்கு ரயில் தடம் புரண்டது

தண்டையார்பேட்டை:  தண்டையார்பேட்டையில் சரக்கு ரயில் பெட்டி தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவொற்றியூரில் ரயில்வேக்கு சொந்தமான கூட்ஸ் ஷெட் உள்ளது. இங்கு சரக்கு ஏற்றுவது மற்றும் இறக்குவது உள்ளிட்ட பணிகள் நடைபெறுகின்றன. இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து சரக்கு ரயில்கள் மூலம் இங்கு கொண்டு வரப்படும் பொருட்கள், லாரிகள் மூலம் பல்வேறு இடங்களுக்கு அனுப்பபட்டு வருகிறது. அதேபோல், லாரிகளில் கொண்டு வரப்படும் பொருட்கள், சரக்கு ரயிலில் ஏற்றப்பட்டு பல்வேறு மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.  சென்னை துறைமுகத்தில் இறக்கப்படும் பொருட்களும் இங்கு கொண்டு வந்து பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்படும். இதேபோல், கூட்ஸ் ஷெட் வியாசர்பாடி அருகில் உள்ளது.

இந்நிலையில், நேற்று அதிகாலை வியாசர்பாடி ஷெட்டில் இருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட சரக்கு ரயில், அதிகாலை 4.30 மணி அளவில் தண்டையார்பேட்டை நேரு நகர் அருகில் வந்தபோது, இன்ஜினில் இருந்து 4வது பெட்டி திடீரென தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியது. இதையறிந்த ரயில் டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொழில்நுட்ப குழுவினர், ஊழியர்கள் விரைந்து வந்து அதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார்  3 மணி நேரத்தில் அது சரி செய்யப்பட்டு, சரக்கு ரயில் பாதை சீரமைக்கப்பட்டது. இதை அடுத்து சரக்கு ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த ரயில் பாதையில் பயணிகள் போக்குவரத்து ரயில்கள் செல்லாததால் எந்த பாதிப்பும் அதிஷ்டவசமாக ஏற்படவில்லை. இச்சம்பவம் காரணமாக தண்டையார்பேட்டை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Thandayarpet , Early morning freight train derailed at Thandayarpet
× RELATED தண்டையார்பேட்டையில் மாவா, ஹான்ஸ் தயாரித்து விற்ற 2 பெண் உட்பட 5 பேர் கைது