×

கூடுதல் தளர்வுகளுடன் இன்று முதல் ஊரடங்கு அமல் சலூன் கடைகள், அழகு நிலையங்கள் திறக்க அனுமதி: பூங்காக்களில் 3 மணி நேரம் வாக்கிங்செல்லலாம்

சென்னை: கூடுதல் தளர்வுகளுடன் இன்று முதல் ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இதையடுத்து இன்று முதல் சலூன் கடைகள், அழகு நிலையங்கள் திறக்கப்படுகிறது. பூங்காக்களில் 3 மணி நேரம் வாக்கிங் செல்லலாம். பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாக பணிகளை மேற்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக தமிழகத்தில், 20202ம் அண்டு மார்ச் 25ம் தேதி ஊரடங்கு சில தளர்வுகளுடன் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கு வருகிற 30ம் தேதி வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த ஊரடங்கு இன்று காலை 6 மணியளவில் முடிவுக்கு வருகிறது. நோய் தொற்று பரவாமல் தடுத்து, மக்களின் உயிர்களைக் காக்கும் வகையில் இந்த முழு ஊரடங்கு இன்று காலை 6 மணி முதல் 21ம் தேதி காலை 6 மணி வரை, மேலும் ஒரு வார காலத்துக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் தொற்று அதிகமாக உள்ள கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களை தவிர, இதர 27 மாவட்டத்தில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுடன் கூடுதலாக பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அழகு நிலையம், சலூன் கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை அரசு பூங்காக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள், விளையாட்டு திடல்களில் நடைப்பயிற்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம். அது மட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாகப் பணிகள் இன்று முதல் நடைபெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதர தொழிற்சாலைகளும் 33 சதவிதம் பணியாளர்களுடன் இயங்கவும், இரு சக்கர வாகனங்களிலும் இ-பதிவு மற்றும் தொழிற்சாலை வழங்கியுள்ள அடையாள அட்டையுடன் பணிக்கு சென்று வர ஊழியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் 20 சதவிகிதம் பணியாளர்கள் அல்லது 10 நபர்கள் மட்டும் பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து நீண்ட நாட்களாக மூடியிருந்த சலூன், அழகு நிலையங்களை திறந்து ஊழியர்கள் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.அதே போல பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர், மாணவர்கள் வருவதை அடுத்து அங்கு கொரோனா பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை பணிகள் நேற்று முழுவீச்சில் நடைபெற்றது.மேலும் பள்ளி, கல்லூரிகளில் பேராசிரியர், ஆசிரியர்கள் மாணவர்கள் காய்ச்சல் பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : Amal , The first curfew with additional relaxation allowed Amal saloon shops and beauty salons to open: 3 hours of walking in parks
× RELATED பொய்யானது பாஜகவின் வாரிசு அரசியல்...